ADVERTISEMENT

”எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன்” - ரஜினிகாந்த் பேச்சு

11:10 AM Mar 12, 2020 | kalaimohan

அரசியல் கட்சி ஆரம்பிப்பது பற்றிய முக்கிய முடிவுகளை இன்று ரஜினிகாந்த் ஊடகங்களை சந்தித்து அறிவிக்க இருக்கிறார் என அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று காலை முதல் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ரஜினிகாந்த் வீடு உள்ள போயஸ் கார்டன் பகுதியில் குழுமினர். அப்பொழுது சில நிர்வாகிகள் கட்சி ஆரம்பித்தால் ரஜினிகாந்த் தான் கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

போயஸ் கார்டன் இல்லத்தில் நடக்கும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளரை அவர் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்து சென்னை லீலா பேலஸ் ஹோட்டலுக்கு புறப்பட்டார். அப்பொழுது அவரது ரசிகர்கள் அவரது கார் மீது பூக்கள் தூவி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்த சந்திப்பில் ரஜினிகாந்த் பேசியதாவது, கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பில் எனக்கு ஒரு ஏமாற்றம் இருந்ததாக கூறியிருந்தேன். நான் கூறிய விஷயங்களை ஊடகங்கள் பல்வேறு மாதிரி வெளிப்படுத்தின. 1996 இல் இருந்து நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என கூறியதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல, நான் முதன் முதலில் 2017 ல் தான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தேன். நான் பதவிக்கு வரவேண்டும் என நினைத்திருந்தால் 1996 லேயே அந்த நாற்காலி என்னை தேடிவந்தது.

சிலர் அரசியலை தொழிலாக வைத்துள்ளனர். திமுக, அதிமுக என பெரிய கட்சிகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் உட்கட்சி பதவிகள் இருக்கிறது. நாம் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சி நிர்வாகிகள் அதிகம் வேண்டும். அதேபோல் கட்சியில் தலைவர் மட்டுமே நான். முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை. நான் கனவில் கூட நான் என்னை முதல்வராக நினைக்கவில்லை. சட்டமன்றத்தில் பேசுவது இதெல்லாம் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கட்சியில் தேவையான நிர்வாகிகள் மட்டும் போதும்.

கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என நான் கூறியதை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை சில இளைஞர்கள் மட்டும் ஏற்றுக்கொண்டனர். அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், அதிகாரிகளுடன் நான் ஆலோசனையில் இருந்தேன். அரசியலில் அழகு பார்ப்பது எனக்கு பிடிக்காது. எம்ஏல்ஏ ஆகணும், எம்பி ஆகி அழகு பார்க்கணும் என்பதெல்லாம் எனக்கு பிடிக்காது.

நாம் எதிர்க்க போவது இரண்டு ஜாம்பவான்களாக இருக்கும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை என்பதை மனதில் கொள்ளவேண்டும். தமிழகத்தில் சரியான ஆளுமை இல்லை. ஆள் பலம், பண பலம் இருந்தும் கலைஞரின் அரசியல் வாரிசு என்பதை நிரூபிக்கும் நிலையில் ஸ்டாலின் உள்ளார். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி அலை உருவாக வேண்டும். அவ்வாறு உருவானால் அசுர பலமுடைய கட்சிகள் உடையும். இந்த வயதில் என்னை நம்பி வர இருக்கிறீர்கள் முதலிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடுவது நல்லது.

என்னை வருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சிவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சி மக்களிடம் ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT