ADVERTISEMENT

ராஜேந்திர பாலாஜி தலைமறைவு... பதிலளிக்க மறுத்த ஓபிஎஸ்

02:27 PM Dec 18, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் நிர்வாகியுமான ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகளை அமைத்து விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க ஓபிஎஸ் மறுத்துள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான வழக்கு நீதிபதி நிர்மல்குமார் தலைமையில் நேற்று (17/12/2021) விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக நண்பர்கள் மூலம் பணம் பெற்றதற்கு ஆதாரம் வலுவாக இருக்கிறது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. அவரை கைது செய்து காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இருக்கிறது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் ராஜேந்திரபாலாஜி தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வைக்கப்படும் பொய்ப் புகார் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் நீதிபதி நிர்மல்குமார், ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனுவை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, தான் கைது செய்யப்படக்கூடும் என்பதால், ராஜேந்திரபாலாஜி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு டி.எஸ்.பி., இரண்டு காவல்துறை ஆய்வாளர் தலைமையில் 6 தனிப்படைகளை அமைத்து விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. மேலும், ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தனிப்படைகள் திருச்சி, சென்னை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளதாகவும், அங்கு ராஜேந்திரபாலாஜியை தீவிரமாகத் தேடிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ், ''ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நல்ல தீர்ப்பு பெறப்பட்டு அதன்படி மத்திய அரசும் அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையின்படி ஜல்லிக்கட்டு நடைபெறும். நெல்லை பள்ளிக்கூட விபத்து உள்ளபடியே அனைவருக்கும் வருத்தத்தை உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மறுஆய்வு செய்து உடனடியாக பராமரிக்க வேண்டும்” என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் ராஜேந்திர பாலாஜி தொடர்பாகக் கேள்வி எழுப்ப, ''அது நீதிமன்றத்தினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே கருத்து கூற விரும்பவில்லை'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT