ADVERTISEMENT

நெருங்கும் தேர்தல்; உச்சக்கட்டத்தில் உட்கட்சி மோதல்.. கலங்கும் ராஜஸ்தான் காங்கிரஸார்!

10:54 AM May 12, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றதில் இருந்தே அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே உட்கட்சி மற்றும் ஆட்சி தொடர்பாக மோதல் தொடர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் அப்போது துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 18 பேர் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் தலையீட்டையடுத்து துணை முதல்வர் மற்றும் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். இருப்பினும், வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பாஜக அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சச்சின் பைலட் வலியுறுத்தி வருகிறார். இதனால் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் ஆகிய இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.

வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளும் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக சச்சின் பைலட் அறிவித்தார். ஆனால், இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இருப்பினும், கட்சித் தலைமையின் எதிர்ப்பையும் மீறி சச்சின் பைலட் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஜெய்ப்பூர் நகரில் கடந்த மாதம் 11 ஆம் தேதி நடத்தினார்.

இந்நிலையில் சச்சின் பைலட் ஜன் சங்கர்ஷ் யாத்ரா என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஊழல் மற்றும் தேர்வுத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் ஆகியவற்றுக்கு எதிராக அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூருக்கு 5 நாள் நடைப்பயணம் மேற்கொள்கிறார். இந்த நடைப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று கிஷன்கர் என்ற இடத்தை சென்றடைந்தார்.

நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த சச்சின் பைலட், “நான் எழுப்பியுள்ள இந்த விவகாரம் மக்களைச் சார்ந்தது என்பதால் இந்த கடுமையான வெப்பக்காலமான மே மாதத்திலும் மக்கள் என்னுடன் சாலையில் யாத்திரை வருகிறார்கள். ஊழல் மற்றும் இந்த பிரச்சனைகள் எல்லாம் நம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையவை. இது நம்மையும் சேர்த்தே பாதிக்கும். நாம் எழுப்பும் பிரச்சினைகளை நமது மாநில அரசு கவனத்தில் கொள்ளும் என நம்புகிறோம்" என பேசினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்று அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியின் ஆயுட்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைந்து அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உட்கட்சிக்குள்ளேயே இப்படியான மோதல் போக்குகள் ராஜஸ்தான் காங்கிரஸாரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT