Skip to main content

உச்சத்தில் உட்கட்சி மோதல்; ராஜஸ்தான் அரசுக்கு கெடு விதித்த சச்சின் பைலட்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

rajasthan congress sachin pilot talks about his five days yatra

 

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றதில் இருந்தே அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே உட்கட்சி மற்றும் ஆட்சி தொடர்பாக மோதல் தொடர்ந்து வருகிறது.

 

அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் அப்போது துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 18 பேர் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் தலையீட்டையடுத்து துணை முதல்வர் மற்றும் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். இருப்பினும், வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பாஜக அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சச்சின் பைலட் வலியுறுத்தி வருகிறார். இதனால் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் ஆகிய இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.

 

வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளும் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக சச்சின் பைலட் அறிவித்தார். ஆனால், இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இருப்பினும், கட்சித் தலைமையின் எதிர்ப்பையும் மீறி சச்சின் பைலட் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஜெய்ப்பூர் நகரில் கடந்த மாதம் 11 ஆம் தேதி நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஜன் சங்கர்ஷ் யாத்ரா என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஊழல் மற்றும் தேர்வுத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் ஆகியவற்றுக்கு எதிராக அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூருக்கு கடந்த 11 ஆம் தேதி தொடங்கி 5 நாள் நடைப்பயணம் மேற்கொண்டார். இந்த நடைப்பயணத்தின் கடைசி நாளான நேற்று அதனை நிறைவு செய்தார்.

 

rajasthan congress sachin pilot talks about his five days yatra

 

இந்நிலையில்  செய்தியாளர்களைச் சந்தித்து சச்சின் பைலட் பேசுகையில், "ஊழலுக்கு எதிராக மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 6 மாதங்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்க அவகாசம் உள்ளது. நான் யார் மீதும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தவில்லை.  தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த கருத்து மோதலும் இல்லை. எனது கோரிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஏற்கப்படாவிட்டால், மாநில அளவிலான மாபெரும் போராட்டம் நடத்தப்படும். நான் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனது கடைசி மூச்சு வரை ராஜஸ்தான் மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்வேன் என உறுதி அளிக்கிறேன். யாரும் என்னை அச்சுறுத்த முடியாது. எனது இந்த போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. இந்த போராட்டமானது ஊழலுக்கு எதிராகவும் இளைஞர்களின் நலனுக்காகவும் நடத்தப்படுகிறது" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.