ADVERTISEMENT

ராஜபாளையம் தொகுதியை கரன்ஸியால் கபளீகரம் செய்யும் ராஜேந்திரபாலாஜி!  

01:51 PM Apr 02, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


ராஜபாளையம் தொகுதியில் உள்ள பதிமூன்றாயிரம் விஸ்வகர்மா வாக்குகளை நம்பியா ராஜேந்திரபாலாஜி தொகுதி மாறினார்? என்று கேட்டால், வேறுவிதமான பதில் வருகிறது. இத்தொகுதியில், ஜாதி வாக்குகள் மட்டுமே ஒரு வேட்பாளரின் பலமென்று சொல்லிவிட முடியாது. 1980இல் தனித்தொகுதியாக இருந்தபோது, ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் போட்டியிட்ட, பட்டியலினத்தைச் சேர்ந்த மொக்கையன் எம்.எல்.ஏ. ஆனார். அதற்குமுன் 1967இல் சுயேச்சையாகப் போட்டியிட்ட, ராஜூக்கள் சமுதாயத்தவரான சுப்பராஜாவும் எம்.எல்.ஏ. ஆகியிருக்கிறார்.

ADVERTISEMENT

முக்குலத்தோரும், தேவேந்திரகுல வேளாளர்களும் மெஜாரிட்டியாக உள்ள இத்தொகுதியில், நாடார், நாயக்கர், ராஜூக்கள் மற்றும் சாலியர் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். சிட்டிங் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆக்டிவான எம்.எல்.ஏ. என்று பெயரெடுத்துள்ள இவர், சாதாரண மக்கள் பணிக்கும் பெரிய அளவில் விளம்பரம் தேடிக்கொண்டதாக விமர்சிக்கப்படுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிடித்துப்போனதால், பின்னாளில் கட்சியின் மாவட்டச் செயலாளராவார்; அமைச்சராவார் என்றெல்லாம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ராஜேந்திரபாலாஜி மட்டும் போட்டியிடவில்லை என்றால், தொகுதியை எளிதாக தக்கவைத்திருப்பார் என திமுகவினரே ‘உச்’ கொட்டுகின்றனர். மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துவரும் ராஜேந்திரபாலாஜியை வீழ்த்துவதற்கான வியூகத்தை, திமுக மேலிடம் வகுத்துத் தராமலா இருக்கிறது? என்ற கேள்விக்கு இத்தொகுதியில் பதிலில்லை.

தனது பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் “தகாத வார்த்தைகளைப் பேசிவரும் ராஜேந்திரபாலாஜி அதிமுக ஆட்சியில் ரவுடித்துறை அமைச்சராக இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ராஜேந்திரபாலாஜியை சிறைக்கு அனுப்புவதுதான் முதல் வேலை” என்று உறுதியளித்திருப்பது, உ.பி.க்களிடமும் கூட்டணிக் கட்சியினரிடமும் வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்குமுன் ஐந்து தடவை வென்றுள்ளதால், அதிமுகவின் கோட்டை எனச் சொல்லப்படும் ராஜபாளையம் தொகுதியில், ‘நான் எனக்காக வாழவில்லை. எனக்கு குடும்பமும் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம் மக்களுக்கே!’ என்றொரு தோற்றத்தை, குறுகிய நாட்களிலேயே வலுவாக ஏற்படுத்தியிருப்பது ராஜேந்திரபாலாஜியின் பலமாகப் பார்க்கப்படுகிறது. ‘வெற்றி பெறவைத்து எம்.எல்.ஏ. ஆக்கினால், இதைச் செய்வேன்; அதைச் செய்வேன்..’ என வாக்குறுதி அளிக்காமல், ஒரு சமுதாயத்தையும் விட்டுவைக்காமல், அனைத்து சமுதாயத் தலைவர்களிடமும் ‘நன்கொடை எவ்வளவு வேண்டும்?’ எனக் கேட்டு, ‘கையில காசு; வாயில தோசை’ ஸ்டைலில், அந்தந்த இடத்திலேயே ‘செட்டில்’ செய்து, ‘அடேங்கப்பா’ என வாய்பிளக்க வைத்திருக்கிறார். ராஜூக்களின் கோட்டைகளுக்குள் புகுந்து ஆதரவை திரட்டியிருக்கிறார். பாஜக கூட்டணியில் உள்ளதால், சிறுபான்மையினரின் வெறுப்பை அதிமுகவும் சம்பாதித்துள்ள நிலையில், ‘ஜாதி, மதம் பார்த்து நான் உதவுவதில்லை. எனக்காக ஒன்றரை லட்சம் கிறிஸ்தவர்கள், மோகன் சி.லாசரஸ் தலைமையில் ஜெபம் செய்தார்கள். வேளாங்கண்ணி தேவாலயத்திலும் ஆசிபெற்றுள்ளேன்’ என உருக்கமாகப் பேசி, கிறிஸ்தவ போதகர்களை, தன் வெற்றிக்காக பிரார்த்தனை செய்ய வைத்துள்ளார். முக்குலத்தோர் வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை, அமமுக வேட்பாளர் காளிமுத்துவுக்கு போகவிடாமல் தடுத்து, தன்பக்கம் திருப்பியிருக்கிறார்.

தங்கபாண்டியனின் நாடார் சமுதாய இளைஞர்களின் வாக்குகளைப் பிரிக்கும் வேட்பாளர்களாக ச.ம.க. – விவேகானந்தனும், நாம் தமிழர் – ஜெயராஜும் உள்ளனர். புதிய தமிழகம் சார்பில் அய்யர் போட்டியிடுகிறார். ‘ஓட்டுக்குப் பணம்’ என்ற உச்சக்கட்ட பட்டுவாடா இருதரப்பிலும் நடந்தாலும், ‘எக்ஸ்ட்ரா’ கவனிப்பில் இறங்கியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. சிட்டிங் எம்.எல்.ஏ. என்ற தகுதியும், நாடார் சமுதாய வாக்குகளும், கூட்டணிக் கட்சியினரின் வாக்கு வங்கியும் தங்கப்பாண்டியனுக்கு பலம் என்றாலும், தொகுதியின் தட்பவெப்பம் அறிந்து ‘ஆன்மிகம்’ பேசி, கரன்ஸிகளை தண்ணீரைப் போல் செலவு செய்து வருகிறார் ராஜேந்திரபாலாஜி. ஆளும்கட்சி வேட்பாளர் பணத்தை இப்படி தண்ணீரைப் போல செலவு செய்துவருவதால், அதனை சமாளிக்க திமுகவினர் வழிகளை யோசித்துவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT