தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று நேற்று (26/02/2021) மாலை அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ‘ஸ்மெல்’ செய்துவிட்ட விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், நேற்று (26/02/2021) மாலை 04.20 மணிக்கு ஆரம்பித்து 04.40-க்குள்,உயர் கோபுர விளக்குகளை அவசரகதியில் திறந்துவைத்தார்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம், பொன்விழா மைதானம், தென்காசி சாலை உள்ளிட்ட 15 இடங்களில், தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டிலான உயர் கோபுர விளக்குகளை, சிமெண்ட் பூசியும் பூசாமலும், கல்வெட்டு பதிக்காமலும், அவசர அவசரமாகத் தேங்காய் உடைத்து, மாலை போட்டு, சூடம் கொளுத்தி தொடங்கி வைத்தார்.