ADVERTISEMENT

“முதல்வராக இருந்த ஒருவருக்கு பிரதமர் ஆவதற்கான தகுதி இல்லையா...” - ராஜன் செல்லப்பா

06:00 PM Oct 28, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவின் 52ஆம் ஆண்டு விழா தமிழ்நாடு முழுக்க அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வந்தது. அது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எதுவாக இருக்கட்டும் எடப்பாடியின் கரத்தை வலுப்படுத்துங்கள். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து எடப்பாடி சொல்லுகின்ற பிரதமர்., ஏன் சூழ்நிலை வந்தால் எடப்பாடியாரே பிரதமராக வரக்கூடிய அளவுக்கு 40 தொகுதிகளிலும் அற்புதமான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்கினால், எடப்பாடியின் கரம் ஓங்கினால் டெல்லியில் எடப்பாடி சொல்லக்கூடியது நடக்கும்” என ஆக்ரோஷமாகப் பேசினார்.

இதையடுத்து, கடந்த 25 ஆம் தேதி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “சிரிப்பு தான் எனது பதில். பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம்” என்று கூறினார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா இன்று (28-10-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அண்ணாமலை கூறியது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை அதிமுகவினர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். நான்கரை ஆண்டுகள் ஆட்சி நடத்தி தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். ஆகவே, அவருக்கு எல்லா வகையிலும் தகுதி இருப்பதாகத் தான் நாங்கள் கருதுகிறோம். முதல்வராக இருந்த ஒருவருக்கு பிரதமர் ஆவதற்கான தகுதி இல்லையா? மேலும், எடப்பாடி பழனிசாமி தான் பிரதமர் வேட்பாளர் என்று நாங்கள் சொல்லவில்லை. அதற்கு நாங்கள் தயாராகவும் இல்லை. ஆனால், பிரதமரை நிர்ணயிக்கக்கூடிய தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது.

இன்றைக்கு இருக்கக்கூடிய பிரதமர் மோடி, குஜராத்தில் முதல்வராகத் தான் இருந்தார். அவர் முதல்வராக இருந்தபோது அவர்தான் பிரதமராக வருவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுபோல், எடப்பாடி பழனிசாமி எந்த குறையும் இல்லாமல் ஆட்சி நடத்தி வந்தார். இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் பிரதமர் ஆவதற்கு தகுதி இருக்கிறது. ஆனால், எடப்பாடிக்கு மிகச் சிறந்த தகுதி இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT