ADVERTISEMENT

“தொண்டர்களை வாழ வைக்கும் அன்னையாகத்தான் இனி என் வாழ்வு” - பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்

07:16 AM Jan 25, 2024 | mathi23

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

மேலும், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இயலாத அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்து, விஜயகாந்த்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், மறைந்த விஜயகாந்தின் திருவுருவப் படத்தை, விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று (24-01-24) மாலை 4 மணிக்கு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தொண்டர்களை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்னையாகத்தான் இனி என் வாழ்வு இருக்கும். இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இதுதான் நம் கோவில். இன்று போடும் அன்னதானம் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை தொடரும்.

பலரும், மறைந்த விஜயகாந்தின் பெயரில் ட்ரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டீர்கள். உங்களது விருப்பப்படி, ட்ரஸ்டை நான் அவர் மறைந்த அன்றே ஆரம்பித்துவிட்டேன். வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் ட்ரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்க வேலைகள் அன்றே ஆரம்பித்துவிட்டது” என்று தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT