நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 இடங்கள் கொடுக்கப்பட்டன. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தேமுதிக படுதோல்வி அடைந்தது. மேலும் தேமுதிக மாநில கட்சி அந்தஸ்த்தையும் இழந்தது. அதோடு தேமுதிக 2 சதவிகித வாக்குகளை மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் பெற்றது. இதனால் தனது வாக்கு வங்கியை பெருமளவு இழந்தது. இதற்கு காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பு போல் கட்சி பணியில் இல்லாததும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதே போல் பிரேமலதா கட்சி நடத்தும் முறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது என்கின்றனர். நடந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும் தேமுதிகவால் அதிமுக கூட்டணிக்கு எந்த வாக்கும் பெரியளவு இல்லாததால் அதிமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது.

Advertisment

dmdk

இதனால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் மற்றும் அமைச்சர்கள் தேமுதிகவை வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கழட்டி விடலாம் என்று கூறி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் தேமுதிகவுக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலைமையால் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என்கின்றனர். நாம் தமிழர் கட்சி மற்றும் கமலின் மக்கள் நீதி மய்யம் இரண்டும் புது வாக்காளர்களை கவர்ந்து உள்ளதால் அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுக ஒருவேளை தேமுதிகவை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டால் தேமுதிகவின் எதிர்காலம் பெரிய கேள்விக் குறியாகி விடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.