ADVERTISEMENT

விஜயகாந்த் வெற்றிபெற்ற தொகுதியில் பிரேமலதா போட்டி..-உற்சாகத்தில் தொண்டர்கள்

10:52 AM Mar 15, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தே.மு.தி.க, அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. அதேசமயம் தனித்துப் போட்டியிடுவது குறித்தும் தே.மு.தி.க ஆலோசனை நடத்தி வந்தது.

இந்நிலையில் அ.ம.மு.கவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 60 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிட உள்ளது. நேற்று (14.03.2021) இரவு தே.மு.தி.கவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தே.மு.தி.க பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

பிரேமலதா இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றுள்ளார். தேசிய அளவிலான தனித்திறன் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனையும் ஆவார். 1990ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் விஜயகாந்த் பிரேமலதாவை மணந்தார். இவர்களது திருமணம் மதுரையில் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் தலைவர், முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் தலைமையில் நடந்தது. விஜயகாந்த் - பிரேமலதா இணையருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கியதிலிருந்து அக்கட்சியின் பிரச்சார பலமாக பிரேமலதா திகழ்கிறார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளரான பிரேமலதா, தமிழகத்தில் நடந்த பல்வேறு பொது மற்றும் இடைத்தேர்தல்களின்போது தமிழகமெங்கும் பயணம் செய்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி) ஆகிய 4 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து விருத்தாசலம் பேருந்து நிலையம், பாலக்கரை பகுதிகளில் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தொடர்ந்து, விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.கவை வெற்றிபெறச் செய்வோம் எனக் கூறி முழக்கமிட்டு ஊர்வலமாக சென்றனர்.

அ.தி.மு.க அணியிலிருந்து தே.மு.தி.க கழட்டிவிடப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அ.ம.மு.கவோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த சூழ்நிலையில், நேற்று (14.03.2021) இரவு திடீரென பிரேமலதா விருத்தாசலம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்தத் தொகுதியில் ஏற்கனவே அ.ம.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தியாக.ரத்தினராஜன் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலக்கிக்கொள்ளப்படுவார் எனத் தெரிகிறது.

2006ஆம் ஆண்டு தே.மு.தி.க களம் கண்ட தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட நிலையில், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றிபெற்றார். விஜயகாந்த் வெற்றிபெற்ற அதே தொகுதியில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவது அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT