ADVERTISEMENT

இடைத்தேர்தலில் மாறி மாறி குற்றம் சாற்றும் தலைவர்கள்!  

04:39 PM Oct 09, 2019 | Anonymous (not verified)

புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ், திமுக கூட்டணி சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி சார்பில் புவணேஸ்வரன் போட்டியிடுகின்றார். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் ரங்கசாமியும் மற்றும் இவ்விரு கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT



பிரச்சாரத்தின் போது இன்னாள் முதல்வரும், முன்னாள் முதல்வரும் ஒருவர் ஒருவர் மாறி மாறி குற்றசாட்டுகளை அள்ளி வீசுகின்றனர்.

நேற்றைய பிரசாரத்தின்போது முதலமைச்சர் நாராயணசாமி, “காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் என்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி. புதுவையில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 16 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகளின் பலம் 11 ஆகத்தான் உள்ளது. அதிலும் என்.ஆர்.காங்கிரசில் 7 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். அவர் கணக்கு தெரியாமல் ஆட்சி மாற்றம் என்கிறாரா? அல்லது மக்களை ஏமாற்ற அப்படிச் சொல்கிறாரா? ஆட்சி மாற்றம் என்று அவர் அரைத்த மாவையே அரைக்கின்றார். அவரது கட்சியில் உள்ளவர்கள் வேறு கட்சிக்கு ஓடி விடக்கூடாது என்பதற்காக ஆட்சி மாற்றம் என்ற தேனை தடவுகின்றார். தேர்தல் முடிந்தவுடன் வீட்டுக்கு சென்றுவிடுவார். அவர் முதலில் எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறாரா? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்களை தேடி வருவார். சட்டமன்ற கூட்டம் நடக்கும்போதே வாட்ச் கடையில்தான் (கைக்கெடிகாரம்) உட்கார்ந்திருந்தார். அவரை எதற்காக மக்கள் தேர்வு செய்தனர்? ரங்கசாமி எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும்ம், இல்லாவிட்டால் அந்த பதவியை ராஜினாமா செய்யவேண்டும்” என்று ரங்கசாமி மீது குற்றச்சாடுகளை அடுக்கினார்.

இதேபோல் ரங்கசாமி பிரச்சாரத்தின் போது, “ புதுவை அரசுக்கு இப்போதுள்ள அதிகாரம் தான் நாங்கள் ஆட்சியில் இருந்த போதும் இருந்தது. அதை வைத்துக்கொண்டுதான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றினோம். கடைசி நேரத்தில் கூட வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கினோம். சிலரிடம் வாக்குகேட்கும்போது, உங்களால்தான் எங்கள் பிள்ளை டாக்டர் ஆனார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT



இந்த ஆட்சியில் புதிதாக என்ன திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள்? தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சிகள் தான் வழக்கமாக ஆளும் கட்சியை குறை சொல்லும். ஆனால் புதுவையில் ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளை குறை கூறி காலத்தை கடத்தி வருகின்றனர். மக்களை பற்றி சிந்தித்து மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவது தான் ஆட்சியாளர்களின் வேலை. ஆனால் அந்த வேலையை இவர்கள் செய்வதில்லை. இந்த ஆட்சி எப்போது மாறும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. மக்களுக்கு தேவையானதை செய்யாமல் எதிர்க்கட்சிகளை குறை சொல்வதை ஆளுங்கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று பதிலடி கொடுத்தார்.

முன்னாள், இன்னாள் முதல்வர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் குற்றசாட்டுகளை கூறிக் கொண்டு வீடு வீடாக வாக்குகள் சேகரிப்பதை விந்தையாக பார்க்கின்றனர் புதுச்சேரி காமராஜ் தொகுதி மக்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT