ADVERTISEMENT

“மருத்துவ வல்லுநர்களாக மாறிய காவல்துறையினர்” - கள்ளச்சாராய விவகாரத்தில் இபிஎஸ் காட்டம்

12:02 PM Jun 06, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளச்சாராய விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

இந்நிலையில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்... கங்கையே சூதகமானால் என்ன செய்வது? என்பதற்கு ஏற்றார்போல், தற்போது நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் இருந்தன. கடந்த மே மாதம், தஞ்சாவூரில் சட்ட விரோத பார் ஒன்றில் தனித் தனியாக வெவ்வேறு நேரங்களில் மது அருந்திய எஸ்.குப்புசாமி (68) மற்றும் டி. விவேக் (36) ஆகிய இரு மீன் வியாபாரிகள் அரசு மருத்துவமனைகளில் மரணமடைந்துள்ளனர். அவர்கள் சயனைட் அருந்தியதால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒருவர் சயனைட் உட்கொண்டவுடன் உடனடியாக மரணம் சம்பவிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே, சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த இருவரது உடற்கூராய்வை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடத்த நான் வலியுறுத்தி இருந்தேன்.

மேற்கண்ட இரண்டு மரணங்களும் சட்ட விரோத பார்களினால் ஏற்பட்ட நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கிடாரிப்பட்டியில் அரசு நடத்தும் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானத்தை அருந்திய ஒருவர் இறந்துள்ளார். இவருடன் மது அருந்திய 16 வயது சிறுவன் உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறை, இறந்தவரின் உடலை உடற்கூராய்வு செய்து பரிசோதிப்பதற்கு முன்னரே, அவர்கள் பெயிண்ட் வேலைக்கு பயன்படுத்தும் தின்னரை தண்ணீருக்கு பதில் கலந்து குடித்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரிப்பதாகக் கூறியுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

எப்போதிருந்து காவல்துறை அதிகாரிகள் மருத்துவத்தில் வல்லுநர்களாகத் திகழ்ந்து, ஆளும் அரசுக்கு சாதகமான பதிலை பத்திரிக்கை செய்திகளாக தருகின்றனர் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. ‘ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நம்பிய மக்களுக்கு ஓரளவாவது நன்மை செய்பவன் நல்ல அரசியல்வாதி... சுயநலத்துக்காக மக்களை படுகுழியில் தள்ளுபவன் நாசக்கார அரசியல்வாதி.’ என்று மேலைநாட்டு அறிஞர் ஒருவர் கூறினார். அவரது சொல்லை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஆட்சியாளர்கள் நாள்தோறும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT