ADVERTISEMENT

தனது நிலையில் மாறாத பாமக நிறுவனர் ராமதாஸ்! அப்செட்டான கட்சிகள்! 

12:37 PM Jul 20, 2019 | Anonymous (not verified)

நேற்று தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் திரு உருவப் படத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பதை, மற்ற கட்சிகள் தான் அதிகமாக எதிர்பார்த்திருந்தார்கள். ஏனெனில் பாமகவை தொடங்கிய பொழுது டாக்டர் ராமதாஸ் அளித்த ஒரு வாக்குறுதி எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய கால்கள் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ படாது என அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் வருவாரா என்று கேள்வி எழுந்தது. மேலும் தனது வாக்குறுதியை மீறினால் விமர்சனங்கள் வரும் என்ற சூழலில் படத் திறப்பு விழாவுக்கு வரவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

ADVERTISEMENT



அதோடு முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், "அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கம்! உழைப்பாளர் மக்கள் கட்சியின் நிறுவனரும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப்படத்தை சட்டப் பேரவை மண்டபத்தில் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு திறக்கும் விழாவிற்கான சட்டப் பேரவைச் செயலாளரின் அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க நன்றி! வாழ்நாளில் சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்தில் ஓர் அடி எடுத்து வைக்க மாட்டேன் என்று உறுதி ஏற்று, அதை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் இவ்விழாவில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ராமசாமி படையாட்சியார் உரிமைகள் அற்று கிடந்த ஊமை ஜனங்களுக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்தவர், போராடியவர். அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் சட்ட பேரவை மண்டபத்தில் அவரது உருவப்படத்தை திறப்பது அவருக்கு செய்யப்படும் சரியான அங்கீகாரம் ஆகும். இதற்காக தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT


ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தாங்கள் தான் அறிவித்து அரசாணை வெளியிட்டு இருந்தீர்கள். அதுமட்டுமின்றி கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அவரது உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அதற்கான அடிக்கல்லையும் கடந்த ஆண்டு நட்டு வைத்தீர்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியவர் ராமசாமி படையாச்சியார் நினைவைப் போற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தொடர்ச்சியாக அவரது திருவுருவ படமும் சட்டப் பேரவை மண்டபத்தில் திறக்கப்படுவது அவருக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. திரு ராமசாமி படையாச்சியார் உருவ படம் திறப்பு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என டாக்டர் ராமதாஸ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT