ADVERTISEMENT

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; பரப்புரையைத் தொடங்கும் முதல்வர்!

10:01 PM Mar 18, 2024 | prabukumar@nak…

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ADVERTISEMENT

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜ் போட்டியிட உள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக - காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில். திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். இதனையடுத்து 23 ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் மார்ச் 24 ஆம் தேதி தனது பரப்புரையைத் தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT