ADVERTISEMENT

நல்ல வேளை... ஜஸ்ட்டு மிஸ்ஸில் கிடைத்த பெரிய வெற்றி! 

04:26 PM May 23, 2019 | vasanthbalakrishnan

நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மத்தியில் பாஜக தனிப்பெரும்பாண்மை பெறும் அளவுக்கு முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக முன்னணியில் இருக்கிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐ.ஜே.கே எனப்படும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் (எ) பச்சைமுத்து திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வரும் இவர், தனக்கு அடுத்த இடத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சிவபதியை விட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல உள்ளார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே பாஜகவுடன் நன்கு நெருக்கம் காட்டிய பாரிவேந்தர், அந்தத் தேர்தலில் பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் பாஜக சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு லட்சத்துக்கும் மேலான வாக்குகளை வாங்கினாலும் வெற்றி பெற முடியவில்லை. தேர்தலுக்குப் பிறகும் பாஜகவுடன் நட்பாகவே இருந்த பாரிவேந்தர், 2019 தேர்தலில் மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால், பாஜகவோ அதிமுகவுடன் கூட்டணி வைத்ததிலிருந்து பாரிவேந்தரை மறந்தது. அவருக்கு சீட் அறிவிக்கப்படவில்லை.

பிறகு, திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலை சந்தித்துப் பேசினார். திடீரென திமுகவிடமிருந்து அழைப்பு வர, ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்து பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆனார் பாரிவேந்தர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவானது. தற்போது அவரது வெற்றி உறுதியாகிக்கொண்டு இருக்கிறது. அதுவும் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கு பாஜக கூட்டணியில் சீட் கொடுக்கப்பட்டு பாஜகவின் தாமரை சின்னத்திலோ இல்லை அதிமுகவின் இரட்டை இலையிலோ போட்டியிட்டிருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதான் என்று இந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது தெரிகிறது. அதனால், பாஜக - அதிமுக கூட்டணி சீட் கொடுக்க மறுத்தது இவருக்கு நல்லதாகவே அமைந்துள்ளது. ஜஸ்ட்டு மிஸ்ஸில் பாரிவேந்தருக்குஒரு பெரிய வெற்றி கிடைத்து முதல் முறையாக நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT