ADVERTISEMENT

‘எங்கள் தரப்பு கருத்தையும் கேட்கவேண்டும்’ - உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ்க்கு எதிராக இ.பி.எஸ். கேவியட் மனு

08:58 AM Aug 06, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக அலுவலக சாவி இ.பி.எஸ். தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட விவகராத்தில் உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தொடர்பாக இ.பி.எஸ். தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக இரண்டாகப் பிரிந்து ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தலைமையில் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி எடப்பாடி தலைமையில் அதிமுகவின் பொதுக்குழு வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் காலை, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பூட்டப்பட்டிருந்த அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதன்பின் அங்கு வந்த ஓ.பி.எஸ். அலுவலகத்தினுள் சென்று முக்கிய ஆவணங்களை தன் வாகனத்தில் எடுத்துச் சென்றார். இந்த நிகழ்வின்போது, அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்ட ஒழுங்கு காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி, சாவியை தங்கள் தரப்பிடம் தரவேண்டும் என்று ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இ.பி.எஸ். தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், இ.பி.எஸ். தரப்பினர், அதிமுக அலுவலக சாவி தொடர்பான ஓ.பி.எஸ். மேல் முறையீட்டு மனு மீதான உத்தரவில் தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT