ADVERTISEMENT

எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். படத்தைதான் போட வேண்டும்: தினகரன் 

03:54 PM May 12, 2019 | rajavel

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தரராஜை ஆதரித்து பொட்டலூரணி பகுதியில் அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது:-

ADVERTISEMENT


தமிழகத்தில் ஜெயலலிதாவின் பெயரை சொல்லிக் கொண்டு, போலியான ஆட்சி நடந்து வருகிறது. மக்களை பாதிக்கும் திட்டங்களை ஜெயலலிதா எதிர்த்தார். அவர் இருந்திருந்தால் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் உயிர் இழந்திருக்க மாட்டார்கள். நீட் தேர்வால் மாணவி அனிதா உயிர் இழந்திருக்க மாட்டார். மோடியை ஜெயலலிதா எதிர்த்தார். அதனால்தான் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது, மோடி வந்து பார்க்கவில்லை.

ஜெயலலிதா மரணம் குறித்து நடந்து வரும் விசாரணைக்கு இன்று வரை ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்கள். இதனால்தான் அவர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் ஓட்டு கேட்கிறோம். மோடிக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம்?. இவர்கள் அண்ணா படத்துக்கு பதிலாக, மோடி படத்தை வைத்தாலும் வைப்பார்கள். இதனை தடுக்கதான் நாங்கள் வந்துள்ளோம்.

அ.தி.மு.க. மூடப்பட இருக்கும் கம்பெனி. அந்த கம்பெனியில் தொண்டர்கள் இல்லை. அத்தனை தொண்டர்களும் எங்களிடம் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், தற்போது தினகரன் கட்சி ஆரம்பித்து உள்ளார். அது தமிழகத்துக்கு பிடித்த பிணி என்று கூறி உள்ளார். நான் அ.தி.மு.க. துரோகிகளுக்குதான் பிணி. அவர் பா.ஜனதாவில் சேர்ந்து விட்டு, ஜால்ரா அடித்து கொண்டு இருக்கிறார்.

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் அதற்கு அனுமதி கொடுத்து விட்டனர். பின்னர் எப்படி அம்மாவின் ஆட்சி என்று சொல்ல முடியும்?. அவர்களுக்கு அப்படி சொல்ல தகுதி இல்லை. துரோகத்தை பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடாது. வரும் காலத்தில் எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படத்தைதான் போட வேண்டும். இவ்வாறு கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT