ADVERTISEMENT

“நியாயம் தர்மம் வெல்லும் வரை போராட்டம் தொடரும்” - மனோஜ் பாண்டியன்

01:23 PM Mar 19, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓ.பி.எஸ். தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று (19ம் தேதி) சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபின் நீதிபதி குமரேஷ் பாபு, “தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரிக்கிறேன். அன்று தெலுங்கு வருடப் பிறப்பின் காரணமாக நீதிமன்றத்திற்கு விடுமுறை தான் என்றாலும், உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் அனுமதி வாங்கி அன்று முழுவதும் வழக்கை விசாரித்து 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை தேர்தல் நடைமுறையான வேட்பு மனுத் தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவற்றை தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது” என்று உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ். அணியின் மனோஜ் பாண்டியன், “எங்கள் தரப்பில் கடந்த 17ம் தேதி அன்று வழக்கினை விசாரித்து அனைத்து தரப்பு வாதங்களுக்கும், பதில் மனுக்களுக்கும் 11.4.2023 அன்று விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. இந்த நிலையில், அவசரமாக இந்தத் தேர்தல் ஏன் என்ற கேள்வி எங்களால் எழுப்பப்பட்டது. இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை இந்த மாதம் 22ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். மேலும், இந்தத் தேர்தலின் முடிவினை வெளியிடக்கூடாது எனும் உத்தரவினை பிறப்பித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், ‘முடிவுகளை அறிவிக்கக்கூடாது என்றாலும், இன்று பிற்பகல் மூன்று மணியோடு வேட்பு மனுத் தாக்கல் முடிகிறது. இதுவரை இ.பி.எஸ். மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அப்போது அவர் வெற்றி பெற்றதாகக் கருதிவிடலாம் இல்லையா?’ என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மனோஜ் பாண்டியன், “அந்த தீர்மானங்கள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தால் முழுமையாக விசாரிக்கப்பட்டு, அதன் தீர்ப்பினை தருவதாக நீதிபதி அறிவித்துள்ளார். ஆகவே அந்த தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர் நீதிமன்றம் முழுமையாக ஆராயும். தீர்மானங்கள் மீதான விசாரணை 22ம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்துள்ளார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சட்ட விரோதமாக 11.7.22ம் தேதி அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று நாங்கள் குரல் கொடுத்து அதனை நீதிமன்றத்தின் முன் எழுப்பியிருக்கிறோம். அதற்கு நீதிமன்றம், அதனை ஆராயும் எனத் தெரிவித்திருக்கிறது. அதுவரை இந்தத் தேர்தலுக்கான முடிவை அறிவிக்கக்கூடாது எனத் தெரிவித்திருப்பதை எங்களுக்கு மிகப் பெரிய வெற்றியாக கருதுகிறோம்” என்று தெரிவித்தார்.

செய்தியாளர்கள், ‘அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்று இ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டதே’ என கேட்டதற்கு பதில் அளித்த அவர், “இன்னும் உறுப்பினர் அடையாள அட்டையே தரப்படவில்லை. வெறும் 100 பேருக்கு மட்டும் கொடுத்துள்ளனர். ஆகையால், அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் தெரியும் இது தேர்தலா அல்லது எங்கள் ஒருங்கிணைப்பாளர் சொன்னாரே அதுபோல், ‘பிக்பாக்கெட்’-ஆ என்பதை அறிவார்கள்” என்றார்.

நீதிமன்றமே தலையிட்டு தேர்தலை நடத்தினால் தேர்தலைச் சந்திக்க நீங்கள் தயார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஓ.பி.எஸ். உச்சநீதிமன்றத்திலேயே, ‘தேர்தல் வைத்தால் நானும் இ.பி.எஸ்.-சும் போட்டிபோடுவோம் வர தயாரா’ என்றார். இதுவரை அதற்கான பதில் இல்லை” என்றார்.

எத்தனை ஆண்டுகள் தான் இந்தச் சட்டப்போராட்டம் தொடரும் என எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “நியாயம் தர்மம் வெல்லும் வரை, நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT