ADVERTISEMENT

ஓ.பி.எஸ். அணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

07:40 PM Oct 05, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து தனது அணி நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 28 ஆம் தேதி தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த ஒருமாத காலமாக மத்திய பாஜக தலைமையில் இருந்து தினந்தோறும் எங்களிடம் தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள். தேசிய அளவில் கட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் இந்தியாவை ஆள முடியும் என்ற சூழல் உள்ளது. பாஜக 2 முறை ஆட்சி செய்திருக்கிறது. 3வது முறையும் ஆட்சி செய்கின்ற தகுதியையும் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக பாஜக தங்கள் நிலைப்பாட்டை அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 11 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் 16 ஆம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி இராமச்சந்திரன் தலைமையில், சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் அக்டோபர் 11 ஆம் தேதி (11-10-2023) மாலை 05.00 மணிக்கு நடைபெற உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT