ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தல் என்றும் பாராமல் அதிரடி நடவடிக்கை எடுத்த ஓ.பி.எஸ். & இ.பி.எஸ்!

03:24 PM Sep 21, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தல் என்றும் பாராமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் எடுத்திருக்கும் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்டுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், வரும் அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து சந்தித்த பாமக, இந்த உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்கப்போவதாக அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை உள்ளாட்சித் தேர்தலில் சரிகட்ட எண்ணிக்கொண்டிருக்கும் அதிமுகவினருக்கு இந்த முடிவு ஏற்கனவே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் அதிமுக, பாஜகவுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயாராகிவருகிறது. ஆனால், அதிமுகவினர் சிலரே பாஜக, அதிமுக கூட்டணியை விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் 6 வார்டு உறுப்பினர்களை அதிமுகவிலிருந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் நீக்கியிருப்பது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ‘கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த காரணத்தினாலும், ஊராட்சி ஒன்றியக்குழு 1வது வார்டு உறுப்பினர் இ. ஜெகதீஸ்வரன், 3வது வார்டு உறுப்பினர் பி.எஸ். அந்தோணி, 4வது வார்டு உறுப்பினர் கே. மூக்கம்மாள், 5வது வார்டு உறுப்பினர் ஜி. அறிவழகன், 6வது வார்டு உறுப்பினர் ஆர். செல்வி, 7வது வார்டு உறுப்பினர் எம். கலைச்செல்வி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய மீனவர் பிரிவு செயலாளர் ஆர். சந்திரசேகரன், உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர் ஆர். பிரசாத், டி. கெப்புராஜ் ஆகியோர் இன்று (நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அதிமுகவின் இந்த அறிவிப்பு அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு, தேனி மாவட்ட அதிமுகவில் பதற்றத்தையும், மாவட்ட அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT