ADVERTISEMENT

நவநீதகிருஷ்ணின் பதவி பறிப்பு!-பிண்ணனி என்ன?

08:36 PM Jan 28, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான நவநீதகிருஷ்ணனிடமிருந்து வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்சும் இணைந்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த செய்தி அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பின்னணியில் ஏகப்பட்ட அரசியல் காரணங்கள் இருக்கின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள், மா.செ.க்கள் உள்ளிட்டவர்களுடன் எடப்பாடியும் பன்னீரும் இன்று ஆலோசனை நடத்தினர். கூட்டம் துவங்கியதுமே தனது பேச்சைத் துவக்கிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "கட்சியின் கட்டுப்பாடுகளை மூத்த நிர்வாகிகளே மீறுவது வருத்தமாக இருக்கிறது. அதில் சமீபத்திய உதாரணம் நவநீதகிருஷ்ணன். நீட் தேர்வு குறித்து அமைச்சர் அமீத்சாவை சந்திக்க திமுக டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற எம்.பி.க்கள் குழுவில் நவநீதகிருஷ்ணண் போயிருக்கிறார். இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

அம்மா (ஜெயலலிதா) இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருப்பாரா? சரிபோகட்டும். திமுக டி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நவநீதகிருஷ்ணன், ராஜ்யசபாவில் கனிமொழிதான் எனக்கு வழிகாட்டி என கனிமொழியை புகழ்ந்து பேசியிருக்கிறார். இதையெல்லாம் சாதாரண நிர்வாகி செய்திருந்தால் கட்சி சும்மா இருக்குமா? நடவடிக்கை எடுத்திருப்போமா இல்லையா? திமுக நமக்கு எதிரி கட்சி. அந்த கட்சியினரோடு ஒட்டி உறவாடுபவர்கள் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியவர்கள் ஆவர். அதனால், அவர் எம்.பி.என்பதற்காக நடவடிக்கை எடுக்காமல் போனால் கட்சியில் கட்டுப்பாடு காணாமல் போகும்? இது கட்சிக்கு நல்லதல்ல. உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோபமாக பேசினார் சண்முகம். இதனை பலரும் ஆமோதித்துள்ளனர்.

இதனையடுத்து கூட்டம் முடிந்ததும், நவநீதகிருஷ்ணணிடமிருந்த வழக்கறிஞர் அணி செயலாளர் பதவியை பறித்துள்ளனர். இதுதான் பதவி பறிப்புக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT