ADVERTISEMENT

மாநிலங்களவையில் ‘மோடி...மோடி...’ என பாஜக எம்.பி.க்கள் முழக்கம்! 

12:05 PM Jul 27, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து ஐந்தாம் நாளான நேற்று வரை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவுவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

மேலும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறது. இதையொட்டி மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை நேற்று காலை வழங்கியது. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். நேற்றும் இரு அவைகளிலும் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதே போன்று மாநிலங்களவையில் இந்தியா, இந்தியா என எதிர்க்கட்சி எம்.பி.க்களும், மோடி, மோடி என பாஜக எம்.பி.க்களும் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதையடுத்து, மாநிலங்களவை மதியம் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. அதே சமயம் பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT