ADVERTISEMENT

நாகையில் ஏரியாவிற்கு தகுந்தாற்போல் பேசி மக்களை கவர்ந்து வாக்குகளை கேட்கும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

12:38 PM Apr 08, 2019 | Selvakumar.k

கஜா புயல் நிவாரணம் மக்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன், துறைமுகத்தை சீர்செய்வேன் என இடத்திற்கு தகுந்தாற்போல், வாக்குறுதிகளை கொடுத்து வாக்கு சேகரித்துவருகிறார் நாகை நாடாளுமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் குருவையா.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இம்மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வாக்கு வேட்டையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நாகையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடும் ஓய்வுபெற்ற நீதிபதியான குருவைய்யா. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் ஏரியாவிற்கு தகுந்தாற்போல் வாக்குறுதிகளை கொடுத்துவருகிறார். இந்நிலையில் நாகூரில் பேசும்போது “காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால். நாகை மாவட்டத்தை சேர்ந்த நாகூர் திட்டச்சேரி திருமருகல் உள்ளிட்ட பல கிராமங்களின் சுற்றுசூழல் பாதிப்பால் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றன. அவர்கள் சளி, ஆஸ்துமா, புற்றுநோய், என பல தொல்லைகளால் அவதிப்படுகின்றனர். இதை மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.


அதேபோல் நாகப்பட்டினத்தில் பேசும்போது, “பழமை வாய்ந்த நாகை துறைமுகம் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் கிடக்கிறது. இதனை நவீனப்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவந்து அதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்’’ என்றார்.


செருதூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தவர், “மற்ற தொகுதிகளைக் காட்டிலும் நாகப்பட்டினம் தொகுதி கல்வியில் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது. அதனை போக்க சர்வதேச அளவிலான கல்வி கிடைக்க வழிவகை செய்வேன். புயலால் பாதிக்கப்பட்ட வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பகுதிகளில், புயல் நிவாரணம் என்பது முழுமையாக இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக கிராமத்தில் உள்ள ஏழ்மையான மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆளுங்கட்சி பிரமுகர்கள் மட்டுமே அந்த நிவாரணத்தை எடுத்துச் சென்றிருக்கின்றனர் .அந்த நிவாரணம் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்” என்றார்.



சுகாதாரமில்லாமல் இருக்கும் பகுதிகளில் ஒன்றான தலைஞாயிறு பகுதியில் பேசியவர், “உலக தரத்தில் மருத்துவ சிகிச்சை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இலங்கை உடனான தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு என அனைத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பேன். இதற்கு முன்பு மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் சரியாகவும் செய்யாத காரணத்தினால்தான் தொகுதியில் உள்ள குறைகள் இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றால் வித்தியாசமான முறையில் மக்களுடன் கலந்து பேசி அவர்களுக்கான குறைகளை தீர்ப்போம் நிதி ஒதுக்கீட்டில் எந்த ஒளிவுமறைவும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் தொகுதிக்காக செலவு செய்யப்படும். கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் பார்த்திராத ஒரு மக்களவை உறுப்பினர்போல் நான் செயல்படுவேன்’’ என்றார். “நீதிபதியாச்சே அவருக்கு எங்க என்ன பேசணும்னு தெரியாமலா போகும்’’ என்கிறார்கள் மற்ற கட்சிக்காரர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT