ADVERTISEMENT

எதுவும் தெரியாமல் அறிக்கை விடலாமா? - இபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த அமைச்சர் பெரியகருப்பன்

10:52 AM Jan 06, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு கொள்முதலுக்கு விவசாயிகளுக்கு வழங்க அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விடக் குறைவாக அதிகாரிகளும், இடைத்தரகர்களும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், உங்கள் ஆட்சியில் கரும்பு விவசாயிகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்பது தெரியுமா? எதையுமே தெரிந்து கொள்ளாமல் அறிக்கை விடலாமா? என எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடியுள்ளார் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “எடப்பாடி பழனிசாமி வழக்கம்போல், கழக அரசைக் குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இன்று கரும்பு கொள்முதல் பற்றி உள்நோக்கத்துடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்து நான்கு பொங்கல் விழாக்களைக் கொண்டாடி இருக்கிறார். அப்போது கரும்பு வழங்கிட வெளியிட்ட அரசாணைகளை முழுமையாகப் படிக்காவிட்டாலும் அவற்றின் சாராம்சத்தையாவது தெரிந்துகொண்டோ தற்போது அறிக்கை வெளியிடுவதற்கு முன் நம் அரசு வெளியிட்ட அரசாணையையாவது படித்திருந்தோ அல்லது படித்தவர்களிடம் தெரிந்துகொண்டோ இருந்திருக்கலாம்.

எதையும் படிக்காமல் தெரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாட்டைக் கூறுவது முன்னாள் முதல்வருக்கும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முதல்வராயிருந்த 2021 பொங்கலுக்கு கரும்பு விவசாயிகளுக்கு வழங்கும் தொகை (வெட்டுக் கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு, போக்குவரத்துச் செலவு உட்பட) ரூ.30/- வழங்க ஆணையிடப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியுமா? எதையுமே தெரிந்து கொள்ளாமல் அறிக்கை விடலாமா?

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்ற முழு நீளக் கரும்பிற்கு அரசால் ரூ.33 என நிர்ணயம் செய்யப்பட்டது. இது முந்தைய அ.தி.மு.க. அரசு அறிவித்த ஒரு கரும்பின் கொள்முதல் விலையான ரூ.30-ஐ விட 10% அதிகமாகும். இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள முழு நீளக் கரும்பிற்கும் அரசால் ரூ.33/- என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் விவசாயிகளுக்கு வழங்கும் தொகையுடன் வெட்டுக் கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு போக்குவரத்து செலவு உள்ளிட்டவை சேர்ந்ததாகும்.

கரும்பு கொள்முதலுக்கு என்றுமில்லாத அளவிற்கு ‘எக்காரணம் கொண்டும் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் விலைக்கு குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படக்கூடாது, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணுப் பரிமாற்ற முறையில் கரும்புக்கான தொகை செலுத்தப்பட வேண்டும்.’ என்பது உள்ளிட்ட தெளிவான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கரும்பு விவசாயிகள் மனங்குளிர்ந்து முதல்வரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாராட்டைப் பொறுத்துக் கொள்ளாமல் ஆதாரமின்றி அறிக்கை விடுவதற்குப் பதில் சேலத்தில் உள்ள கரும்பு விவசாயிகளிடமாவது உண்மை நிலையைக் கேட்டறிந்து தெளிவு பெற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT