ADVERTISEMENT

பக்கத்து பக்கத்து பெஞ்சில உட்கார்ந்து வேர்க்கடலை, இஞ்சி மொரப்பா சாப்புட்ருக்கோம். இப்படி கேட்க வேண்டியதில்லையே ஜெயக்குமார்... எஸ்.வி.சேகர் பதில்

05:32 PM Aug 05, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ''அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வையுங்கள்'' என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஜெயக்குமார், ''எஸ்.வி.சேகர் உண்மையிலேயே மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் இவர் எந்தக் கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினார் அ.தி.மு.க. கொடி. அண்ணா பெயரைச் சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார். அவ்வளவு மான ரோஷம் சூடு இருந்தால் அந்த ஐந்து வருட சம்பளத்தைத் திரும்ப கொடுத்துவிட வேண்டும். அ.தி.மு.க. கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினேன், இந்தச் சம்பளம் எனக்குத் தேவையில்லை என்று அரசிடம் திரும்ப கொடுத்திட வேண்டும். இரண்டாவது, எம்.எல்.ஏ.வாக இருந்ததால் பென்சன் வருகிறது. அதை அவர் வாங்குகிறார். இந்த பென்சன் வேண்டாம் என்று எழுதி கொடுத்திட வேண்டும். இந்த இரண்டு கேள்விக்கு அவரை பதில் சொல்ல சொல்லுங்கள்'' எனக் கூறியிருந்தார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டிக்குப் பிறகு எஸ்.வி.சேகர் ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார். அதில், நான் என்ன சொன்னேன். தி.மு.க.வின் கொள்கைகளைப் போலவே அ.தி.மு.க. இருந்தால் அ.தி.மு.க. ஜெயிப்பது கடினம். அதனால் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நான் சொன்னேன். சொன்ன கருத்துக்கு ஏதோ பதில் சொல்வதாகக் கூறி, மான ரோஷம் இருந்தால் ஐந்து வருட பணத்தைத் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்கிறார்.

நான் ஒரு பைசாக் கூட அ.தி.மு.க.வில் இருந்து வாங்கவில்லை. நான் எம்.எல்.ஏ.வாக இருந்து, நேர்மையாக உழைத்து, ஒரு பைசாக் கூட கமிசன் வாங்காமல் இருந்து, அரசு கொடுக்கக் கூடிய பணத்தை ஓய்வூதியமாக வாங்கிக்கொள்கிறேன். அதில் என்ன தப்பு இருக்கிறது. நான் எங்காவது ஒரு பைசா கமிசன் வாங்கியிருக்கிறேன் எனத் தெரியுமா? நாம எல்லோருமே பக்கத்து பக்கத்து பென்ஞ்சில உட்கார்ந்து வேர்க்கடலை, இஞ்சி மொரப்பா சாப்புட்ருக்கோம். அவ்ளோ விரோதியா என்னைப் பார்த்து வெட்கம், மானம், ரோசம் இருக்கான்னு கேட்க வேண்டிய அவசியமே இல்லையே ஜெயக்குமார்.

ஜெயக்குமார் உங்களை நான் நல்ல நண்பராகத்தான் பார்க்கிறேன். நான் சொன்னது, இந்த அ.தி.மு.க. தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லப்பட்ட கருத்தே தவிர வேறு ஒன்றுமே கிடையாது. எப்போது தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகளை அ.தி.மு.க.வில் கடைப்பிடிக்க ஆரம்பித்தீர்களோ, எம்.ஜி.ஆர். எப்போ மூகாம்பிகை கோயிலுக்குப்போய் வைரவால் சாத்திட்டு வந்தாரோ, எப்போது ஜெயலலிதா எல்லா கோயிலுக்கும் போய் ஆமாம் நான் ஆன்மீகவாதி அப்படின்னு உரக்கச் சொன்னார்களோ, அப்பவே அறிஞர் அண்ணான்னு நீங்கள் கொண்டாடுகின்ற அண்ணா கொள்கையும், ஈ.வே.ரா. கொள்கையும் புதைக்கப்பட்டுவிட்டது என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரியும். ஆனால் நீங்கள் சொல்ல மாட்டீர்கள். நான் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் நான் ஜெயலலிதா காலில் விழுந்தவன் அல்ல. அவர் என்னை சொந்தச் சகோதரனைப் போல என்னைப் பார்த்துக்கொண்டார். இவ்வாறு கூறியிருக்கிறார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT