ADVERTISEMENT

தேதி குறித்த ஓபிஎஸ்; கிளம்பும் எதிர்பார்ப்புகள் !

07:07 PM Apr 09, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சி மாநகரில் வரும் 24ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவும், ஜெயலலிதா பிறந்த நாள் விழாவும், அதிமுக துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51 ஆம் ஆண்டு துவக்க விழாவும் முப்பெரும் விழாவாக வரும் 24 ஆம் தேதி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

அதிமுக தொண்டர்கள் அங்கு லட்சக்கணக்கில் குழுமி அதிமுகவின் வலிமையை நிரூபிப்பார்கள்” எனக் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் கே.சி.பழனிசாமி போன்ற கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கலந்து கொள்வார்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், “கட்சியில் தான் அவர்கள் இருக்கிறார்கள். மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கலந்து கொள்வார்கள்” எனக் கூறினார். சசிகலா கலந்து கொள்வாரா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “முறைப்படியான அறிவிப்பு ஒவ்வொன்றாக வரும். அனைவரும் கலந்து கொள்வார்கள்” எனக் கூறினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “இடைத்தேர்தலில் அதிமுக சந்தித்த மிகப்பெரிய தோல்விக்கு பிரிந்து இருப்பது தான் காரணம். அனைவரையும் சேர்ப்பதற்கு முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறேன். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நிச்சயமாக நாங்கள் சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சிக்காரர்களிடம் நான் வித்தியாசம் பார்ப்பது இல்லை” எனக் கூறியிருந்தார்.

ஆனால் அதிமுகவை ஒன்றிணைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறும் சசிகலாவின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாங்கள் தான் ஒன்றுபட்ட அதிமுக என்பதையே பதிலாக அளித்து வருகின்றனர். மறுபுறம் டிடிவி தினகரன், திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஒரு கட்சியாக அல்லாமல் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்றும் கூறிவருகிறார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் தரப்பினர் முன்னெடுக்கும் முப்பெரும் விழாவில் முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் ஒன்றை ஓபிஎஸ் வெளியிடுவாரா என்றும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT