ADVERTISEMENT

கலைஞருக்கு ஊடக வல்லுநர்கள் புகழாஞ்சலி!(படங்கள்)

01:07 PM Aug 18, 2018 | Anonymous (not verified)


ADVERTISEMENT

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முத்தமிழறிஞர் புகழ் போற்றும் மடல் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எழுதியிருப்பதாவது:

ADVERTISEMENT

போற்றியது நான் அல்ல, நம் கழகத்தினரும் அல்ல. நாம் அப்படிப் போற்றுவதென்பது ஒரு நாள் நிகழ்வில் நிறைவடைவதுமல்ல. நாம் வாழும் காலங்கடந்தும் நம் எதிர்காலத் தலைமுறைகள் ஏற்றுப் போற்றும் வகையில் கொள்கை வழி நின்று நாளும் செயலாற்றுவதே தலைவர் கலைஞருக்கு நாம் செலுத்தும் திடமான புகழாஞ்சலி.

தமிழ்நாட்டின் ஊடகத்துறையினர் தங்களுக்கு இருக்கும் 24 மணிநேரப் பணிக்கிடையிலும் நேரம் ஒதுக்கி, தங்களின் முன்னவரும் முன்னோடியுமான தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு போற்றுவதற்காக, புகழைப் பாடுவதற்காக திருப்புமுனைகள் பல தந்த தீரர்கள் கோட்டமாம் மலைக்கோட்டை மாநகர் திருச்சியில் கூடிய நிகழ்வைத்தான் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களிடம் நெகிழ்வோடும் மகிழ்வோடும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

எந்நாளும் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு தமிழ்நாட்டின் 5 இடங்களில் நினைவேந்தலாக அவர் புகழ்பாடும் வணக்கக் கூட்டங்கள் கழகத்தின் சார்பில் நடைபெறுவதை உடன்பிறப்புகள் அனைவரும் அறிவீர்கள். எந்நாளும் கழகத்தின் வாளும், கேடயமுமாக கலைஞர் நமக்குத் தந்துள்ள முரசொலியில் அது குறித்த செய்திகளும் விளம்பரங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதனை நீங்கள் கவனிக்கும் வகையில் நாள்தோறும் முரசொலி படிக்க வேண்டும் என்பதையும் உடன்பிறப்புகளுக்கு உணர்த்திட இந்தக் கடிதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. கலைஞரின் புகழுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் குறித்த விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சி முதல் தனியார் தொலைக்காட்சிகள் பலவற்றிலும் வெளியாவதையும் கவனித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை எனப் பெயர் பெற்றது “முரசொலி”. அச்சு வாகனம் ஏறிய அந்த மூத்த பிள்ளையாம் முரசொலிக்கு முன்பே, நடைவண்டி பழகுவதுபோல “மாணவர் நேசன்” என்ற கையெழுத்துப் பத்திரிகையை கலைஞர் நடத்தினார். பன்முக ஆற்றல் கொண்ட கலைஞரின் முதல் வெளிப்பாடு, எழுத்து. அந்த எழுத்துக்கு முதலில் அவர் பயன்படுத்திய தளம், பத்திரிகை. எனவேதான், நினைவேந்தல் கூட்டத்தில் முதலாவதாக, திருச்சி மாநகரில் பத்திரிகை-தொலைக்காட்சி ஊடகத்தினர் பங்கேற்ற கலைஞரின் புகழுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு நேற்று (17-8-2018) திருச்சி மாவட்டக் கழகத்தின் தலைமையகமான கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அரங்கில் உணர்ச்சிப் பெருக்குடனும், உள்ளன்புடனும் நடைபெற்றது.

உலகத் தமிழர்கள் போற்றிவணங்கும் தலைவரான நம் கலைஞரை ஊடகத்துறையினர் எப்படி பார்க்கிறார்கள், அணுகுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பாக அமைந்த அந்த நிகழ்வில் தமிழ் இதழியல்-காட்சி ஊடகத்தின் வல்லுநர்களாகத் திகழும் முன்னணி ஊடகத்தினர் பங்கேற்று தலைவர் கலைஞருக்கு மலரஞ்சலி செலுத்தி, புகழஞ்சலி பாடினர்.

தலைவர் கலைஞரின் நெருங்கிய நண்பரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கும் இந்தக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மவுன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டு, கழகத்தின் உள்ள உணர்வு வெளிப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வு முழுவதுமே தலைவர் கலைஞரின் உயர்தனிச் சிறப்புகள் பெருங்கடல் போல ஆழமும், அகலமும் அறியமுடியா வண்ணம் தொடர்ந்து அலை வீசின. கலைஞரின் ஆளுமையைத் துல்லியமாக எடுத்துக்காட்டிய அந்த நினைவலைகளிலிருந்து சில துளிகளை உடன்பிறப்புகளுக்கு எடுத்துக் காட்ட வேண்டியது, உங்களில் ஒருவனான எனது கடமை.

‘ இந்து‘ குழுமத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் என்.ராம்: வாழ்க்கை முழுவதும் பத்திரிகையாளராக கலைஞர் எழுதிக்கொண்டே இருந்தார். தமிழ்நாட்டு பிரச்சினைகள் மட்டுமல்ல, இந்தியா சந்தித்த பிரச்சினைகள், உலகளாவிய பிரச்சினைகள் ஆகியவற்றை அவர் எழுதினார். அரசியல், கலை, இலக்கியம் அனைத்தும் அவரது எழுத்தில் வெளிப்பட்டன. அவருடைய எழுத்துகள் அவர் காலத்திற்குப் பிறகும் புகழ் கொண்டவை. அவை குறித்து ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ள அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் அருண்ராம்: இரண்டு வாரமாக பத்திரிகைகளில் கலைஞரைப் பற்றி நூற்றுக்கணக்கானப் பக்கங்களில் எழுதுகிறார்கள். இரண்டு வாரமாக தொலைக்காட்சிகளில் நூற்றுக்கணக்கான மணி நேரங்கள் கலைஞரைப் பற்றி தொகுப்புகளை வெளியிடுகிறார்கள். ஆனால், இன்னமும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் அவரைப் பற்றிச் சொல்வதற்குத் தேவைப்படுகிறது.

டெக்கான் கிரானிக்கல் பகவான்சிங்: கலைஞர் முதலில் ஒரு பத்திரிகையாளர். அப்புறம்தான் அவர் அரசியல்வாதி. ஏனென்றால் 14 வயதிலேயே ஒரு பத்திரிகையை கையால் எழுதி, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். மக்களிடம் தன் கருத்துகள் சென்று சேரவேண்டும் என்பதில் அவர் அத்தனை உறுதியாகவும், ஆர்வமாகவும் இருந்திருக்கிறார். வளர வளர மக்களின் கருத்துகளைக் கேட்டு அதற்கேற்ப செயல்பட்டவர். ஒரு நாள் அதிகாலை 4 மணிக்கு போன் அடிக்கிறது. எங்கள் வீட்டில் குடிபோகும் நிகழ்வுக்காக ஹோமம் வளர்த்திருக்கிறார்கள்.

அது முடிய நீண்ட நேரமாகும். நான் அவசரமாகப் போய் போனை எடுக்கிறேன். முதல்வராக இருந்த கலைஞர், அன்றைய பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு தன் கருத்தைச் சொல்கிறார். நானே அந்தக் கட்டுரையை அச்சில் படிக்கவில்லை என்பதுதான் உண்மை. நானும் பத்திரிகையாளர் சோவும், கலைஞருக்கு எப்படித்தான் எழுத நேரம் கிடைக்கிறது என்று ஆச்சரியப்பட்டோம்.

நக்கீரன் கோபால் (நக்கீரன் ஆசிரியர்) : நான் இந்த மேடையில் நிற்பது, நீங்கள் இதுபோன்ற நிகழ்வில் உட்கார்ந்திருப்பது எல்லாமே கலைஞரால் நமக்கு கிடைத்த உரிமை. நான் இப்போதும் சொல்வேன், கலைஞர் போட்ட ரோட்டில்தான் நாங்கள் பயணிக்கிறோம். இங்கு நக்கீரன் அச்சிட்டுத்தரப்பட மாட்டாது என்று ஆளுங்கட்சியினருக்கு பயந்து பல பிரஸ்களும் எங்களை மறுத்த நிலையில், முரசொலியில் அச்சிட்டுக் கொள்ளுங்கள் என்று ஆதரவு காட்டியவர் கலைஞர். பொடாவில் நான் கைது செய்யப்பட்டபோது எங்களுக்காக குரல் கொடுத்து, அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து கண்டனக் கூட்டத்தில் பங்கேற்றவர். ஒரு தாய் போல அவர் எங்கள் மீது அக்கறை செலுத்தினார். மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி அடிக்கடி, நடுநிலை என ஒன்றே கிடையாது என்று சொல்வார். நாங்கள் எப்போதும் கலைஞர் வழியில்தான் நடப்போம். அவர்தான் இங்குள்ள அனைவருக்கும் கருத்துரிமையைப் பகிர்ந்து கொடுத்தவர்.

அருணன் (இடதுசாரி பத்திரிகையாளர்): தமிழ்த்தாயின் கருத்துரிமையையும் காத்தவர் கலைஞர். அப்போதெல்லாம் தமிழ்ப் புலவர்கள் தேவாரம், திவ்வியபிரபந்தம், ராமாயணம், மகாபாரதம் இவற்றைத்தான் பேசுவார்கள். போனால் போகிறதென்று கம்பராமாயணம், பெரியபுராணத்தைத் தொட்டுக் கொள்வார்கள். கலைஞர்தான் சிலப்பதிகாரம், திருக்குறள், சங்க இலக்கியம் என தமிழ்த்தாயின் இலக்கியங்களை பாமர மக்களிடம் கொண்டு சேர்த்து தமிழ்த்தாயின் கருத்துரிமையைக் காத்தவர். அதுமட்டுமல்ல, நெருக்கடி நிலை காலத்தில் முரசொலிக்கு கடுமையான தணிக்கை இருந்தபோதும், கருத்துரிமையை தன் கண்ணால் காத்தவர் கலைஞர்.

ப.திருமாவேலன் (கலைஞர் செய்திகள்- நிர்வாக ஆசிரியர்): கலைஞர் அவர்கள் கருத்துரிமையின் காவலர் என்பதற்கு நான் ஒருவனே சாட்சி. ஒரேயொரு கட்டுரை எழுதியதற்காக ஜெயலலிதா என் மீது 11 வழக்குகள் போட்டார். 16 கட்டுரைகள் கலைஞரை எதிர்த்து எழுதியிருந்தாலும் அவர் என் மீது ஒரு வழக்குக்கூட போடவில்லை. என்னை எதிர்த்தும் முரசொலியில் எழுதியதில்லை. எனக்கும் அவருக்கும் ஒரு இன்டர்லிங்க் இருந்தது. அதுதான் திராவிட இயக்க லிங்க். மாற்றுக் கருத்துகளை ஆதரிக்கக்கூடிய பெரிய மனிதராக இருந்தார். அதனால்தான் இன்று அவரைக் கொண்டாடுகிறோம்.

சமஸ் (இந்து நடுப்பக்க ஆசிரியர்): தெற்கில் உதித்த சூரியன் என நாங்கள் கொண்டு வந்த தொகுப்புக்காக கட்டுரைகள் கேட்டபோது பல ஆளுமைகள் தயங்கி ஒதுங்கினர். தொடர்ச்சியாக அரசியல்-பொதுவாழ்வில் செயல்பட்டும் இப்படி ஒதுக்கப்படுகிற ஒடுக்கப்படுகிற தி.மு.க தலைவரின் சாதனைகளை வெளிப்படுத்த வேண்டும் என முடிவெடுத்து அந்தத் தொகுப்பைக் கொண்டு வந்தோம். கலைஞரின் கருத்துரிமை மற்ற மாநிலங்களுக்கும் சேர்ந்ததுதான். மாநில சுயாட்சியை வலியுறுத்தி 1970களில் வெளியான முரசொலி கட்டுரைகளில், நாங்கள் பிரிவினைவாத கட்சியல்ல. பலமான இந்தியா அமைவதற்காகவே வளமான மாநிலங்களைக் கேட்கிறோம். வலிமையான இந்தியா அமைவதற்கே வலிமையான மாநிலங்களைக் கேட்கிறோம் என அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறார்.

குணசேகரன் (நியூஸ் 18): 1975ல் உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில், ஜூன் 3ல் அவருடைய பிறந்தநாளுக்காக கலைஞர் ஒரு கட்டுரை எழுதுகிறார். என் அன்னையைவிட அன்பு காட்டிய அண்ணா என்று அவர் எழுதிய கட்டுரையை அச்சிட மறுக்கிறார்கள். வெகுண்டு எழுந்தார். என்ன அக்கிரமம், இதில் எழுதுவது என்ன குற்றம்? கேட்பாரே இல்லையா என ஒரு கோப உணர்ச்சி அவருக்கு வந்தது.

முதலமைச்சராக இருந்தவருக்கு கார் ஓட்ட ஆள் இல்லை. எல்லோரையும் சகட்டு மேனிக்கு கைது செய்திருக்கிறார்கள். சிறைச்சாலையில் தாக்குதல், யார் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியே போடக்கூடாது என்ற நெருக்கடி இருந்த நேரத்தில், தனியொரு மனிதராக அண்ணாசாலையில் துண்டறிக்கைகளை எடுத்துக்கொண்டு போய், அராஜகம் ஒழிக, ஜனநாயகம் மலர்க, கருத்து சுதந்திரம் வளர்க என்று மக்களிடம் கொடுத்தவர் கலைஞர். அத்தகைய கருத்துரிமைக் காவலர் அவர்கள் தன்னுடைய நெஞ்சுக்கு நீதியில், “சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்!” தன்னுடைய மரணத்திலும் அந்த வரிகளுக்கேற்ப வென்று காட்டியிருக்கிறார். அதுமட்டுமல்ல நெஞ்சுக்கு நீதியில், தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் என்ற பட்டியலில் என்னையும் குறிப்பிட்டிருக்கிறார் என்பது பெருமை.

ராஜா திருவேங்கடம் (சன் நியூஸ்): ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலத்தில் தினகரன் மீது உரிமைமீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டிருக்கிறது. முரசொலி ஆசிரியர் செல்வம் சட்டமன்றத்தில் கூண்டிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறார். இந்து மீதும் உரிமை மீறல் பிரச்சினை வந்தது. போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால் உடனே உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வந்துவிடலாம். ஆனால் ஒரு முறைகூட கலைஞர் ஆட்சியில் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படவில்லை. அவர்தான் கருத்துரிமைக் காவலர். எந்தக் கேள்வியையும் அவரிடம் கேட்கலாம். உடடினயாக பதில் தரக்கூடியவர் கலைஞர்.

ஆர்.முத்துக்குமார் (நியூஸ் 7): நான் கல்கி பத்திரிகையில் பணியாற்றியபோது, கலைஞருக்கு 10 கேள்விகளைக் கேட்டு அதை கல்கியில் “பரமு” என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். அது வெளியான அடுத்தநாள், முரசொலியில் 10 கேள்விகளுக்கும் “தரமு” என்ற பெயரில் பதில் வெளியிடப்பட்டது. அத்தனை கேள்விகளும் அவரைக் கோபப்படுத்தக்கூடியவை. ஆனால், அத்தனை பதில்களும் அவருக்கே உரிய வகையில் ஆணித்தரமாக அமைந்திருந்தன. நான்கே வார்த்தைகளில் அவர் பத்திரிகைத் துறை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இன்றைய செய்தி-நாளைய வரலாறு என்பதுதான் அது. நாளைய வரலாற்றை உருவாக்கக்கூடியதாக இன்றைய செய்திகள் அமைய வேண்டும் என்பதில் கலைஞர் உறுதியாக இருந்தார்.

-ஊடக வல்லுநர்களின் கருத்து மழையின் சில துளிகள் இவை. ஆட்சியாளராக-அரசியல் தலைவராக-பத்திரிகையாளராக தலைவர் கலைஞர் அவர்கள் பன்முகத் திறமையை வெளிப்படுத்தியபோது, கருத்துரிமையைக் காப்பதில் அழுத்தமாக இருந்திருக்கிறார். அதற்காக உறுதியாகப் போராடியிருக்கிறார். அந்தப் போர்க்குணத்தைத்தான் ஊடக வல்லுநர்கள், கழக உடன்பிறப்புகளுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

தலைவரின் புகழுக்கு வணக்கம் செலுத்தும் முதல் நிகழ்வினை திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர், அயர்வில்லாத ஆற்றலாளர் சகோதரர் கே.என்.நேரு சிறப்பாக நடத்தி, நெஞ்சம் நெகிழ வைத்துள்ளார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர்க் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றி. நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் முனைப்பு கட்டிய மாநில நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோருக்கும் நன்றி.

புகழ் வணக்கம் செலுத்தும் அடுத்த நினைவேந்தல் நிகழ்வு, சங்கத் தமிழ் வளர்த்த மாமதுரையில் ஞாயிறன்று நடக்கவிருக்கிறது. அழியாப் புகழ்பெற்ற இலக்கிப் படைப்புகளைத் தந்த தலைவர் கலைஞரின் ஆற்றலைப் போற்ற தமிழ்நாட்டின் இலக்கியகர்த்தாக்கள் கூடுகிறார்கள். உடன்பிறப்புகளாகிய நாம் அந்த நிகழ்வினைச் சிறப்பிப்போம். தலைவர் கலைஞரின் ஓங்கு புகழினை-அவரது உயரிய இலட்சியங்களை இதயத்தில் ஏந்துவோம். இமைப்பொழுதும் ஓயாமல் என்றும் அவர் வழி நடந்து, ஒற்றுமையுடனும் உறுதிப்பாட்டுடனும் கழகம் காப்போம்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT