ADVERTISEMENT

''பாஜகவின் பிரிவினைவாத திட்டத்தை முறியடிக்கதான் இந்த பாதயாத்திரை''-கே.எஸ்.அழகிரி பேச்சு!

06:26 PM May 10, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாஜக அரசைக் கண்டித்து ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் விதமாக அக்கட்சி தொண்டர்கள் அடங்கிய குழு கொடுமுடியிலிருந்து நடைபயணம் செல்லும் நிகழ்ச்சியை 10 ந் தேதி அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மகாத்மா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ம.தி.மு.க. சார்பில் கணேசமூர்த்தி எம்.பி, கொ.ம.தே.க.சார்பில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் ரகுராம், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, "ஈரோடு தெற்கு மாவட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் பேரியக்க தொண்டர்கள் இன்றிலிருந்து 10 நாட்கள் 250 கிலோ மீட்டர் பயணம் செய்து 250 கிராமங்களை சென்றடைந்து மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து பிரச்சார பயணம் மேற்கொள்வார்கள். தி.மு.க.அரசு திறம்படச் செயலாற்றுகிறது. முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி நடத்துகிறார். இந்த ஆட்சி தொடர வேண்டும். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இந்தி திணிப்பைக் கைவிட வேண்டும். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கில மொழி பயன்பாட்டில் இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி எழுதப்படாத உத்தரவாதம் தந்து உறுதியாக கடைபிடித்தது.

பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்திய நாடு சிதறி விடக்கூடாது என்று மொழிவாரி மாநிலங்களை உருவாக்கினார். அதனால்தான் இன்றைக்கும் இந்தியா ஒற்றுமையுடன் திகழ்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மாநிலங்களுக்கு ரூபாய் ஒன்றுக்கு 65 பைசா நிதியாக வழங்கினார். இன்றைக்கு மோடி தலைமையிலான பாஜக அரசு ரூபாய்க்கு 35 பைசா வழங்குகிறது. மாநில அரசுகளின் நிதியைக் குறைத்தால் அரசின் நிர்வாகம் எப்படி நடக்கும். அரசாங்கம் செயலிழந்துவிடும். இதுதான் மத்திய அரசின் நோக்கம். மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க. அரசின் திட்டங்களை முறியடிக்க காங்கிரஸ் பேரியக்கம் பாதயாத்திரை மூலம் மக்களிடம் பிரச்சாரம் செய்ய உள்ளது" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT