ADVERTISEMENT

இதைவிட இஸ்லாமியர்களுக்கு எதிரான துரோகம் வேறு எதையும் அ.தி.மு.க. செய்து விட முடியாது: கே.எஸ்.அழகிரி

02:54 PM Dec 17, 2019 | rajavel

ADVERTISEMENT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மக்களவையில் 303 உறுப்பினர்களை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பா.ஜ.க. அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டாமல் மதரீதியாக பிளவு அரசியலை நடத்துகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஏற்கனவே, இஸ்லாமியர்களின் ஒப்புதல் இல்லாமல் முத்தலாக் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் அசாமில் கணக்கெடுப்பு நடத்தியதில் பல்வேறு குளறுபடிகள், 70 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் மக்களுக்கு உறுப்பு 370-ன் மூலம் வழங்கப்பட்டிருந்த சலுகைகள் பறிப்பு என தொடர்ந்து சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசு எடுத்து வந்தது.



எல்லாவற்றிற்கும் மேலாக, 450 ஆண்டுகாலமாக இருந்த பாபர் மசூதி இடிப்பை கிரிமினல் குற்றமாக உச்சநீதிமன்றம் கருதியது. ஆனால், இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டுமென்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து அறிஞர் பெருமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் களத்தில் இறங்கி, கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தலைநகர் தில்லியில் ஜாமியா இஸ்லாமிய பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக் கழகம், இந்து பனாரஸ் பல்கலைக் கழகம், ஐ.ஐ.டி. மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை, புதுச்சேரி, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், லக்னோ, வாரணாசி, கல்கத்தா, கௌஹாத்தி போன்ற நகரங்களில் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு பா.ஜ.க. ஆட்சியைக் கண்டித்து நாடு முழுவதும் போராடி வருகிறார்கள்.

எந்தவித நியாயமான காரணமும் இன்றி பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தினால் நாடே கலவர பூமியாக மாறியிருக்கிறது. அண்டை நாடுகளில் இருந்து துன்புறுத்தப்பட்டதால் இந்தியாவிற்குள் வரும் இஸ்லாமியர்களைத் தவிர, மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்குவது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. மக்களவையில் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை இருப்பதால் இச்சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் மாநிலக் கட்சிகள் அச்சுறுத்தப்பட்டு, ஆதரவு பெறப்பட்டுள்ளது.


மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் 125, எதிர்ப்பு வாக்குகள் 105. அ.தி.மு.க.வின் 11 வாக்குகளும் எதிர்த்து அளிக்கப்பட்டிருந்தால் சட்டத் திருத்தம் நிறைவேறி இருக்காது. இஸ்லாமியர்களின் உரிமைகளை மறுக்கிற சட்டத் திருத்தத்தை அ.தி.மு.க. ஆதரித்திருப்பதன் மூலம் பா.ஜ.க.வின் ஆணைக்கு கட்டுப்பட்டு செயல்படுகிற கட்சியாக மாறியிருப்பதை உறுதி செய்கிறது. இதைவிட இஸ்லாமியர்களுக்கு எதிரான துரோகம் வேறு எதையும் அ.தி.மு.க. செய்து விட முடியாது.

பா.ஜ.க.வின் பிதாமகர்களாக விளங்குகிற சாவர்கர், கோல்வார்கர் விதைத்த நச்சுக் கருத்துக்களின் அடிப்படையில் இத்தகைய மதவாத அரசியல் நடத்தப்பட்டு இந்தியாவை பிளவுபடுத்துகிற அணுகுமுறை கையாளப்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்து ராஷ்ட்ராவை உருவாக்குகிற முயற்சியில் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ஈடுபட்டு வருகிறார்கள். 1955 இல் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டம், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கியது. ஆனால், 2019 இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் மத அடிப்படையில் குடியுரிமை வழங்க முற்படுகிறது. இதைத் தான் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.


அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து வருகிறவர்களுக்கு குடியுரிமை உண்டு. ஆனால், மற்ற அண்டை நாடுகளான மியான்மர், இலங்கை, பூடான், நேபாளில் இருந்து வருகிற மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை இச்சட்டம் மறுக்கிறது. இதைவிட அப்பட்டமான பாகுபாடு வேறு என்ன இருக்க முடியும் ? மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு ஆகியோர் வடிவமைத்துக் கொடுத்த இந்திய அரசமைப்புச் சட்டத்தை சீர்குலைத்து சிதைக்கிற முயற்சியாகவே இதை கருத வேண்டியிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவை மதரீதியாக சீர்குலைக்கிற பா.ஜ.க.வுக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவதன் வெளிப்பாடுகளே தற்போது நடைபெறுகிற எதிர்ப்பு போராட்டங்களாகும். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT