ADVERTISEMENT

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு பேச வக்கில்லாதவர்கள்... கே.எஸ். அழகிரி

03:34 PM Mar 15, 2019 | rajavel

ADVERTISEMENT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பங்கேற்போடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்தது முதற்கொண்டு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடையே மிகப்பெரிய கலக்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி என்பது 2004 இல் தொடங்கி, 2019 வரை பயணித்து வருகிறது. இக்காலக் கட்டத்தில் நடைபெற்ற 2004 நாடாளுமன்றத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல், 2011 சட்டமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல், தற்போது 2019 நாடாளுமன்றத் தேர்தலையும் இக்கூட்டணி இணைந்து எதிர்கொள்ள இருக்கிறது.

ஏறத்தாழ 15 ஆண்டுகாலத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தலை தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் தேசிய, மாநில நலன் கருதி தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஒருமித்த கருத்தோடு, கொள்கை உடன்பாடோடு செயல்பட்டு வருகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க.வினர் புலம்பிக் கொண்டிருப்பதை நம்மாலே புரிந்து கொள்ள முடிகிறது.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக அமைந்துள்ள கூட்டணி நாம் அமைத்ததைப் போல கொள்கைக் கூட்டணி அல்ல. சில மாதங்களுக்கு முன்பு வரை கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களையும், ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்த கறைபடிந்த கூட்டணியாகும். திரைமறைவு பேரங்களின் அடிப்படையில் அமைந்த கூட்டணி கொள்கைக் கூட்டணியாக இருக்க முடியாது. நமது கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு எதிராக கேள்விகளை தொடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்த அவருக்கு அரசியல் வரலாறு அறிந்திருக்க வாய்ப்பில்லை.

காவேரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்ததில் பா.ஜ.க. அரசு எந்தளவுக்கு வஞ்சனைப் போக்கோடு செயல்பட்டது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். கர்நாடக பா.ஜ.க.வின் நலனில் அரசியல் ஆதாயம் தேட அக்கறை காட்டிய நரேந்திர மோடி தமிழகத்தின் நலன்களை புறக்கணித்ததை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறிய போது அதற்கு மறுதலித்து செயல்பட்ட பா.ஜ.க.வை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். காவேரி பிரச்சினையில் பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் நீதிமன்றத்தின் தீர்வுகள் மூலமாகவே தமிழகத்தின் நலன்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

இலங்கை தமிழர் பிரச்சனையைப் பற்றி தமிழிசை நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இலங்கை தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி செயல்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது. ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் இன்றைக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை தமிழிசையால் மறுக்க முடியுமா ?

தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒப்பந்தம் போட்ட காரணத்தினாலே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜீவ்காந்தி தீவிரவாத அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார். இத்தகைய உயிர் தியாகத்தைச் செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிற ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு என்ன தகுதி இருக்கிறது ? இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து அவர் முன்னிலையில் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியின் துரோகத்தை தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.

பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி பா.ஜ.க.வினர் அடிக்கடி பேசுகிறார்கள். நரேந்திர மோடியும், தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். காமராஜரின் அரசியல் வரலாற்றில் என்றைக்குமே வகுப்புவாத சக்திகளோடு உறவாடியது கிடையாது. கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அப்பழுக்கற்ற காங்கிரஸ் தலைவராகவே வாழ்ந்தார். தமிழக நலன் கருதி பெருந்தலைவர் காமராஜரும், அன்னை இந்திராவும் 1970களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை தமிழிசை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

1966 ஆம் ஆண்டில் தலைநகர் தில்லியில் காமராஜர் குடியிருந்த வீட்டின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சங்பரிவார் கும்பலின் வாரிசாக விளங்கி வருகிற பா.ஜ.க.வினர் அவரது பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான கோல்வால்கர், எட்ஜூவர் போன்றவர்கள் பெயரை உச்சரித்தால் உங்களது முகமூடி கிழித்தெறியப்படும் என்பதால் வல்லபாய் படேலுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சிலை வைக்கிறீர்கள். காமராஜர் பெயரையும், ராஜாஜி பெயரையும் குறிப்பிடுகிறீர்கள். உங்கள் தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு பேச வக்கில்லாதவர்கள் எங்களது தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு பேச என்ன உரிமை இருக்கிறது ?

எனவே, தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2004 பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்ட போகிறது. இந்தியாவின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தியும், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலினும் பதவியேற்கிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும். ஆயிரம் தமிழிசைகள் ஒன்று சேர்ந்தாலும் எந்த சக்தியாலும் இதை தடுக்க முடியாது. இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT