ADVERTISEMENT

அமைச்சர் கருப்பண்ணன் எழுதிய கடிதம்... வேல்முருகன் கடும் கண்டனம்

12:52 PM Jan 25, 2020 | rajavel

ADVERTISEMENT


தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கப்போகும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நேரடியாகவே நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அரசு வகை தேடிக்கொண்டது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கவென்றே ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் திணிக்கிறார் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் மோடி. எப்படியெனில், சுற்றுச்சூழல் அமைப்பின் நிகழ்ச்சியொன்றில், “பூமிக்கு அடியில் உள்ள ஆற்றல்களை எடுத்துப் பயன்படுத்துவதை எதிர்ப்பவன் நான்; ஏனென்றால் அதனால் பூமியே நாசமாகிறது” என்று பேசியவர்தான் அவர்.


மோடி தெரிந்தே செய்யும் இந்த நாசகார ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருக்கிறது. மேலும், மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும்; தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதியைப் பெற வேண்டும் என்றெல்லாம் சட்டவிதிகள் குறுக்கே நின்றன.

இந்த நிலையில்தான் 2018ஆம் ஆண்டில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஒன்றிய அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், “ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பும் அதேசமயம் பெரும் அச்சமும் நிலவுகிறது. அதனால் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டாம்; சுற்றுச்சூழல் அனுமதியும் கோர வேண்டாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது போதுமே மோடி அரசுக்கு! கருப்பண்ணனின் கடிதத்தை அப்படியே பின்பற்றி, திட்டத்தை நேரடியாகவே நடைமுறைக்குக் கொண்டுவர வகை தேடிக்கொண்டது! அதாவது மக்களிடம் கருத்துக் கேட்பது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவது ஆகிய சட்டவிதிகளை ரத்து செய்துவிட்டது; உடனடியாக வேதாந்தா கார்ப்பொரேட் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க 50 கிணறுகளுக்கு அனுமதியும் அளித்துவிட்டது.


இப்படிச் செய்தது மக்களுக்கு எதிரானதாகும்; மாநில உரிமைக்கும் எதிரானதாகும்; “இதை நாங்கள் எதிர்க்கிறோம், அதனால் அனுமதியோம்” என்று மோடி அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும் அதிமுக அரசு!

ஆனால் எதிர்ப்போ வரவேற்போ எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்துவிட்டது அதிமுக அரசு. மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என எடுத்துக்கொண்டுதான், மக்களிடம் கருத்துக் கேட்பது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவது ஆகிய சட்டவிதிகளை ரத்து செய்துவிட்டது மோடி அரசு. அப்படிச் செய்துவிட்டு, நேரடியாகவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் திணிக்கவும் செய்துவிட்டது.

அதிமுக அரசு அமைதி காத்ததே ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதித்ததாகிவிட்டது. இத்தனைக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கவே மாட்டோம் என்று சட்டமன்றத்திலேயே சத்தியம் பண்ணாத குறையாக வாக்குறுதி அளித்திருந்தது அதிமுக அரசு. அது வெறும் கபட நாடகம்தான் என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.


காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழக வேளாண் பகுதிகளை மட்டுமல்ல; தமிழகத்தையே சீரழித்துப் பாலைவனமாக்கிவிடும் ஆபத்தான இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்; அதிமுக பழனிசாமி அரசும், இதனை உடனடியாகத் திரும்பப்பெற மோடி அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருப்பண்ணன் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கப்போகும் ஹைட்ரோ கார்பன் திட்டம்!

அதிமுக மற்றும் ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக அரசுகளின் நயவஞ்சகக் கூட்டால் விளைந்த இந்த நாசகாரத் திட்டத்தை விரட்டியடிப்போம்! இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT