Skip to main content

கீழடி அகழாய்வை 5ஆம் கட்டத்தில் நிறுத்திவிட்டது ஏன்? அதிமுக அரசுக்கு வேல்முருகன் கேள்வி! 

indiraprojects-large indiraprojects-mobile

 

5ஆம் கட்டம் நடந்துகொண்டிருந்த கீழடி அகழாய்வு திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. அதிமுக அரசே இதை அறிவித்திருக்கிறது. நிறுத்தம் ஏன், எதற்கு என்கின்ற இயல்பாகவே எழும் கேள்வியையும் தாண்டி அது பலத்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. காரணம், கீழடி அகழாய்வு நிறுத்தப்படுவது முதல் முறையல்ல; இது இரண்டாவது முறையாகும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், 
 

முதல் முறை அதை நிறுத்தியது மட்டுமல்ல; அகழாய்வையே கைகழுவியதாக அறிவித்தது ஒன்றிய தொல்லியல் துறை. அதன் சார்பில் அமர்நாத் இராமகிருஷ்ணன் அகழாய்வில் ஈடுபட்டிருந்தார். அகழாய்வின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி 2017 பிப்ரவரியில் ஓர் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், “நகரிய நாகரிகத்திற்கான கட்டுமானங்கள் மற்றும் இதர சான்றுகள் முதல் முறையாகக் கிடைத்திருக்கின்றன” எனச் சொல்லியிருந்தார். அவ்வளவுதான், உடனடியாக அவரை கீழடியிலிருந்து தூக்கியடித்தது ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு. அவருக்குப் பதிலாக ஸ்ரீராமன் என்பவரைப் பணியமர்த்தியது. ஸ்ரீராமனோ, “மேற்கொண்டு சான்றுகளே அகப்படவில்லை” என்று ஒரே பக்க அறிக்கையை அளித்து அந்த மூன்றாமாண்டோடு தனது ஆய்வினை முடித்துக் கொண்டார். அத்தோடு அகழாய்வையே ஊற்றிமூடிவிட்டுக் கீழடியையே காலி செய்தது ஒன்றிய தொல்லியல் துறை.

 

Velmurugan tvkஇதனைத் தமிழகமே ஒருசேர எதிர்த்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன; “அமர்நாத் இராமகிருஷ்ணனை மீண்டும் கீழடியில் அமர்த்து!” என்று முழங்கின. ஆனால் அதிமுக அரசும் சரி, அமைச்சர் மாபா பாண்டியரஜனும் சரி, பாஜகவும் சரி; இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதை நிரூபித்தனர்.
 

மாறாத எதிர்ப்பின் காரணமாக, தமிழகத் தொல்லியல் துறையே கீழடி ஆய்வை மேற்கொள்ளும்படியானது. சிவானந்தம் தலைமையில் நான்காம் ஆண்டு ஆய்வில் கிடைத்த சான்றுகள் தற்போது புதிய உண்மைகளை உணர்த்தியிருக்கின்றன. “தேர்ந்த எழுத்தறிவும் சீரிய கலையுணர்வும் கைவினைத் தொழில்நுட்பமும் வெளிநாட்டு வணிகமும் 2600 ஆண்டுகளுக்கு முன்பேயே பெற்றிருந்தவர்கள் தமிழ்மக்கள்” என்கின்றன அந்த நான்காம் ஆண்டு கீழடி அகழாய்வுச் சான்றுகள். இப்போது அய்ந்தாம் ஆண்டு ஆய்வு நிறைவுற்ற நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு அது நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பு நடந்துவந்த நிலையில் 09.10.2019 அன்று மீண்டும் அகழாய்வு நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்று தொழிலாளர்கள் அகழாய்வுக் களத்திற்கு பணிக்காக வந்த போதுதான் அகழாய்வு நிறுத்தப்படுகிறது என்ற அறிவிப்பையே வெளியிட்டது அதிமுக அரசு.


 

110 ஏக்கர் கீழடி தொல்லியல் மேட்டைச் சுற்றி மேலும் 90 ஏக்கர் மேடு உள்ளது. நான்கு ஊர்களை உள்ளடக்கிய அந்த மேடும் தொல்லியல் எச்சங்களைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது. ஆகவே அதையும் அகழாய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆக கீழடி உள்ளிட்ட சுற்றியுள்ள மொத்தம் 200 ஏக்கர் மேட்டையும் “பாதுகாக்கப்பட்ட பகுதியாக” உடனடியாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசு என்ற கோரிக்கை எழுந்து அது வலுப்பெற்றுள்ளது.
 

அதோடு, கீழடியில் இதுவரை கிடைத்த சான்றுகள், உலகின் “நாகரிகம் வாய்ந்த தொல்குடிகள் தமிழர்கள்” என்பதைச் சொல்வதால் அதனை உலகறியச் செய்ய, கீழடியில் கிடைத்த அனைத்து சான்றுகளையும் ஓரிடத்தில் வைத்துப் பாதுகாக்கும் வண்ணம் உலகத் தரம் வாய்ந்த கீழடி அருங்காட்சியகம் ஒன்றை அங்கே அமைக்க வேண்டியது அவசிய அவசியமாகும் என்ற கோரிக்கையும் எழுந்து வலுப்பெற்றுள்ளது.


 

அது மட்டுமல்ல; கீழடியைப் பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். இது அங்கு திருவிழா நடப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. இப்படியான ஒரு விழிப்புணர்வு மற்றும் உற்சாகம் பொங்கும் சூழலில்தான் கீழடியில் மீண்டும் அகழாய்வு நிறுத்தப்பட்டிருக்கிறது. இது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் மீண்டும் அகழாய்வு நிறுத்தப்பட்டதால் சந்தேகம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. இந்த சந்தேகம், மூன்றாம் ஆண்டில் கீழடியை ஊற்றிமூடிய அதே ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக அரசின் நெருக்கடியால்தான் இந்த நிறுத்தமோ என்கிற சந்தேகமாகவும் படுகிறது.
 

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஒன்றிய அரசின் உதவியை நாடுவதாக அறிவித்திருந்தார். அவர் ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு வேண்டப்பட்டவர் என்பதை நாடே அறியும். இதையும் இந்த சந்தேகத்தில் உள்ளடக்கத்தான் வேண்டியுள்ளது.
 

இந்த சந்தேகம் உண்மையாகிவிடக் கூடாது என்றே நம்புகிறோம். அதற்கு முன், அதிமுக அரசே நிறுத்தத்திற்கான காரணத்தை விளக்கமாக மக்களுக்குத் தெரியப்படுத்திவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
 

அதோடு, கீழடி உள்ளிட்ட சுற்றியுள்ள மொத்தம் 200 ஏக்கர் மேட்டையும் “பாதுகாக்கப்பட்ட பகுதியாக” உடனடியாக அறிவிக்க வேண்டும்; அங்கு உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...