ADVERTISEMENT

மாறுபட்ட தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பது ஏன்? கே. பாலகிருஷ்ணன் கேள்வி 

12:18 PM Apr 28, 2018 | rajavel


ADVERTISEMENT

சபாநாயகர்களின் அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மாறுபட்ட தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் திறக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை அப்புறப்படுத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மேலும் அரசு கொறடாவின் உத்தரவை மீறியதால் தற்போதைய தமிழக துணை முதலமைச்சர் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மற்றொரு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

திமுக சார்பில் தொடுக்கப்பட்ட இவ்விரண்டு வழக்குகளிலும் பல மாதங்கள் விசாரணைக்குப் பிறகு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்விரண்டு வழக்குகள் சம்பந்தப்பட்ட விபரங்கள் தனித்தனியானது என்ற போதிலும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் சில கேள்விகளை எழுப்புகின்றன. “சபாநாயகரின் அதிகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது, சபாநாயகரின் அதிகார வரம்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்குகளில் எந்த முடிவும் நாங்கள் எடுக்க முடியாது” என மனுதாரர்களது மனுக்களை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் புதுச்சேரி சம்பந்தப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை கடந்த மாதம் வழங்கியது பல கேள்விகளுக்கு இடமளித்துள்ளது.

புதுச்சேரி மாநில அரசின் பரிந்துரையும் இல்லாமல், அரசுடன் கலந்தாலோசனை செய்யாமல் தன்னிச்சையாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் மூன்று பிஜேபி பிரமுகர்களை எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்து உத்தரவிட்டார். இவர்களது நியமனத்தை ஏற்க முடியாது என புதுச்சேரி சபாநாயகர் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்தார். இப்பிரச்சனை தொடர்பான வழக்கில் சபாநாயகருக்கு அவ்வாறு உத்தரவிட அதிகாரம் இல்லை எனக்கூறி, அவரது உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சபாநாயகர்களின் அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மாறுபட்ட தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது.

மேலும் சபாநாயகரது அதிகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், தொடுக்கப்பட்ட வழக்குகளை ஏற்றுக்கொண்டது ஏன், இவ்வளவு தாமதமாக தீர்ப்பு வழங்கியதும் ஏன் என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் இயல்பாகவே எழுந்துள்ளன.

ஜனநாயக அமைப்பில் உயர்வான இடத்தில் உள்ள நீதித்துறை இத்தகைய ஐயங்களுக்கு இடமளிக்காமல் இருக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு கூறியுள்ளார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT