ADVERTISEMENT

''தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கான தோல்வியாக இருக்கும்'' - கனிமொழி பேட்டி

05:38 PM Feb 16, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டு தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''ஈரோட்டில் 39வது வார்டில் ஏறத்தாழ மாற்றுக்கட்சியிலிருந்து 214 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி, சேகர்பாபு தலைமையின் கீழ் அவர்கள் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்கள். வெற்றி வாய்ப்பு என்பது நிச்சயமாக உறுதி செய்யப்பட்ட ஒன்று. அது தெளிவாகத் தெரிகிறது. இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய அமைச்சர்கள், கழகத்தைச் சேர்ந்த அத்தனை பேருமே வெற்றி வாய்ப்பு உறுதி என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால், மிகப்பெரிய ஒரு வெற்றியை உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பதுதான் தமிழகம் முதல்வர் இவர்களுக்கு விடுத்திருக்கும் அன்பு கட்டளை. நிச்சயமாக அது நடைபெறும் என்று மக்களை காணும் பொழுது தெளிவாகத் தெரிகிறது. தொடர்ந்து தங்களுக்குள்ளே பல குழப்பங்கள் இருக்கும் யாருக்கோ அல்லது தமிழ்நாட்டை வடக்கில் இருக்கக்கூடிய மாற்று சக்திகளுக்கு; நமக்கு எதிரான சக்திகளுக்கு அடகு வைக்கக் கூடியவர்களுக்கு இடம் அளித்து விடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பாடுபடக்கூடிய; குரல் கொடுக்கக் கூடிய திமுகவின் ஆதரவைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவனின் வெற்றி என்பது மிகப்பெரிய சிறப்பான வெற்றியாக இருக்கும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'தோல்வி யாருக்கானதாக இருக்கும்' எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கனிமொழி, ''தமிழகத்திற்கு எதிராக இருப்பவர்களுக்கு; தமிழர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய அத்தனை பேருக்குமான தோல்வியாக இருக்கும்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT