ADVERTISEMENT

“கே.டி. ராகவனை நீக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணை நீக்கியிருப்பது வெட்கக்கேடானது” - ஜோதிமணி

12:42 PM Aug 26, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

“பாஜக பாலியல் குற்றவாளியான கே.டி. ராகவனை கட்சியிலிருந்து நீக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியிலிருந்து நீக்கியிருப்பது வெட்கக்கேடானது, கடும் கண்டனத்திற்குரியது” என ஜோதிமணி எம்.பி. கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் பொதுச்செயலாளரான கே.டி. ராகவன் தொடர்பான ஓர் ஆபாச விடியோ சமூகவலைதளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து ராகவன், தனது கட்சி பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்தார். வீடியோ வெளியான 24ஆம் தேதி மாலை காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, கே.டி. ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகாரும் கொடுத்திருந்தார். அதேவேளையில் வீடியோ வெளியிட்ட மதன், வெண்பா ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கி பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் அறிக்கை வெளிட்டார்.

இந்நிலையில் ஜோதிமணி எம்.பி., “இன்றும் ஆண்களின் உலகம் என்று நம்பப்படுகிற அரசியலில் நாமும் பங்கேற்க வேண்டும் என்று பெண்கள் நினைப்பதே கூட எளிதாக இல்லை. அப்படி நினைத்தாலும் குடும்பம், சமூகம் என்று பல தடைகளைக் கடந்தே அரசியலில் பெண்கள் கால் பதிக்க வேண்டியுள்ளது. தனி ஒரு பெண்ணின் அரசியல் செயல்பாடு என்பது அதனளவில் ஒரு இயக்கம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இப்படி பல கடுமையான சூழல்களைத் தாண்டி அரசியலுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் உறுதி செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளின் தலையாய கடமை. ஒருவேளை கயவர்களால் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அச்சமற்று அவர்கள் பக்கம் நிற்க வேண்டியதும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியதும் அரசியல் கட்சிகளின் பொறுப்பு. அப்பொழுதுதான் அரசியலில் பெண்கள் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் ஈடுபட முடியும்.

பாரதிய ஜனதா கட்சி உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றால், தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கே.டி. ராகவன் செய்த பாலியல் குற்றம் வெளிச்சத்திற்கு வந்ததும், உடனடியாக அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், இந்த பாலியல் குற்றத்தை வெளிக்கொண்டு வந்தவருக்கும், பாதுகாப்பாகவும், பக்கபலமாகவும் நின்று முறையான விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு நேரெதிராக, பாரதிய ஜனதா கட்சி பாலியல் குற்றவாளியான கே.டி. ராகவனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணையும் இந்த பாலியல் குற்றத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவரையும் கட்சியில் இருந்து நீக்கி இருப்பது வெட்கக்கேடானது. கடுமையான கண்டனத்திற்குரியது. ஆனால், பாஜகவிடமிருந்து நாம் வேறு எதை எதிர்பாக்க முடியும்?

இன்னும் பாஜகவின் பல முக்கிய தலைவர்களின் பதினைந்து பாலியல் வீடியோக்கள் வெளிவரும் என்று சொல்லப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் நீக்கப்பட்டு இருப்பது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அந்த வெளிவராத வீடியோவில் இடம்பெற்றிருக்கும் பாஜகவின் முக்கிய தலைவர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே, விசாரணைக்கு முன்பாக அவசர அவசரமாக, பாதிக்கப்பட்ட பெண்ணையும், பாலியல் விடியோவை வெளியிட்டவரையும் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.

இன்னும் எத்தனை சகோதரிகள் பாஜகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் பாரதிய ஜனதா கட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது?

பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி, பாதுகாப்பற்ற கட்சி, அவர்கள் கண்ணியத்தை களங்கப்படுத்துகிற கட்சி என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவில் இருக்கிற ஒவ்வொரு பெண்ணும் நான் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறேன் என்று சொல்வதற்கு கூட வெட்கப்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியில் உள்ள சகோதரிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் கண்ணியமும் அங்கு இல்லை என்பது வெளிப்படை.

இந்த ஒரு சம்பவம் மட்டும் அல்ல, தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை பாரதிய ஜனதா கட்சி ஆதரித்து வருகிறது. அவர்களை தொடர்ந்து கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டவும் அச்சுறுத்தவும் செய்கிறது. இதற்கு பாஜகவின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன், அகில இந்திய மாணவர் அணி செயலாளர் சண்முகம் சுப்பையா, ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் என்று தமிழகத்திலேயே ஏராளமான உதாரணங்களைச் சொல்லமுடியும். இந்திய அளவில் வெட்கக்கேடான, அச்சமூட்டும் ஒரு பட்டியலே உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சியாக இருந்தாலும் அங்கு உள்ள சகோதரிகளும் எமது சகோதரிகளே. அவர்கள் தமிழகத்தின் மகள்கள். அவர்கள் பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து துணை நிற்கும்.

தனது சொந்த கட்சியிலுள்ள பெண்களிடமே தகாத முறையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜகவிடம் தமிழக பெண்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கனவே வெளிவந்துள்ள பாஜகவின் கே.டி. ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ மீதும், இன்னும் வெளியிடப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகின்ற பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களின் மீதும் தமிழக காவல்துறை முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை, அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் எவ்வளவு உயர் பொறுப்பில் இருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழக பெண்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்ய வெண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT