ADVERTISEMENT

கண்ணீர் வடித்த மூதாட்டி; உதவி செய்த முதல்வர் - அடுத்தடுத்து நடந்த சுவாரஸ்யம்

03:54 PM Mar 26, 2024 | ArunPrakash

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. இதுதவிர, நாமக்கலில் உதயசூரியன் சின்னத்தில் கொ.ம.தே.க போட்டியிடுகிறது. இந்தக் கட்சியைத் தவிர்த்து மற்ற கட்சிகள், அவரவர் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர். இது ஒரு புறமிருக்க, அனைத்து கட்சிகளுமே தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிரச்சார பயணத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் துவங்கியுள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ADVERTISEMENT

முதல்வர் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதால், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலரும் முதல்வருடன் சென்றுள்ளனர். தூத்துக்குடி நாடாளுமன்ற மன்ற தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே முதல்வர் புறப்பட்டுள்ளார்.

முதலில் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் வாகனத்தில் சென்றவாறு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்துள்ளார். அதன் பின்னர் தூத்துக்குடி காமராஜர் தினசரி காய்கறி சந்தைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து காய்கறிகள் வரத்து காய்கறிகள் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்துள்ளார். முதல்வர் காய்கறிகள் குறித்து கேள்வி எழுப்பியதும், வியாபாரிகள் ஆர்வத்துடன் பதிலளித்துள்ளனர். அப்போது, காய்கறி வாங்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த மேரி என்ற மூதாட்டி, தான் காய்கறிகள் வாங்க கொண்டு வந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை தவறவிட்டுவிட்டதாக முதல்வரிடம் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். உடனடியாக அந்த பெண்ணிற்கு தமிழக முதல்வர் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். பின்னர் பிரச்சார வாகனம் மூலம் தூத்துக்குடி பள்ளிவாசல் வழியாக சென்றிருக்கிறார். அப்போது, சாலையில் சென்றவர்களிடம் வாக்குகளை சேகரித்துள்ளார். இதனையடுத்து, தூத்துக்குடி லயன்ஸ் ஸ்டோன் பகுதியில், வீதி வீதியாக சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்துள்ளார்.

அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், லயன்ஸ்டோன் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்கின்ற மீனவர் வீட்டிற்குள் திடீரெனெ சென்றுள்ளார். முதல்வர் வீட்டிற்குள் வந்ததால் சூசை குடும்பத்தார் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளனர். பின்னர், அவர்களிடம் பேசி வாக்கு சேகரித்துள்ளார். அதன் பின்னர், அந்த மீனவர் வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தியுள்ளார். அதன் பின்னர் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக வாகனத்தில் சென்றபடி கனிமொழியை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்துள்ளார். இந்த வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் செல்பி எடுத்தும் கைகளை கொடுத்தும் மகிழ்ந்துள்ளனர். தூத்துக்குடி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்ததால் பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT