ADVERTISEMENT

முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் த.வெ.க. தலைவர் விஜய்

08:38 PM Mar 07, 2024 | prabukumar@nak…

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டு தான் நமது இலக்கு என்று தமிழக சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். கட்சியின் முதல் கூட்டமாக, கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் நேரில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காணொளி வாயிலாகப் பேசியதாக கட்சியினர் தகவல் அளித்தனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து த.வெ.க-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய அணியை தொடங்கியும் நிர்வாகிகள் நியமனம் பற்றி அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர் கழகத் தோழர்களோடு இணைந்து, மக்களுக்கு உதவி செய்வார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு மாநிலச் செயலாளராக சி. விஜயலட்சுமி நியமிக்கப்படுகிறார். மாநில இணைச் செயலாளராக எஸ்.என். யாஸ்மின் நியமிக்கப்படுகிறார். மாநிலப் பொருளாளர் பதவிக்கு வி. சம்பத்குமார் நியமிக்கப்படுகிறார். மாநிலத் துணைச் செயலாளர்களாக விஜய் அன்பன் கல்லணை, எம்.எல். பிரபு ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இந்தப் புதிய அணி கழக உள்கட்டமைப்பைச் சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT