ADVERTISEMENT

'விட்டால் திருப்பூரையும் மணிப்பூர் ஆகிவிடுவார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

07:36 PM Apr 13, 2024 | kalaimohan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய முதல்வர் ,''பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அரசமைப்பு சட்டத்தை மாற்றி விடுவார்கள். மோடியின் பாஜக அரசு வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு. கலவரம் செய்வது பாஜகவின் டிஎன்ஏவில் ஊறிப்போய் உள்ளது. பாஜகவை உள்ளே நுழையவிட்டால் சமூக அமைதியைக் கெடுத்து விடுவார்கள். அதிகாரத்தில் உள்ள பாஜக வென்றால், திருப்பூரை மணிப்பூர் ஆக்கி விடுவார்கள். பன்முகத்தன்மைக் கொண்ட இந்தியாவை பிரதமர் மோடி சிதைக்க பார்க்கிறார். சமூகநீதி என்ற வார்த்தையே பிரதமர் மோடிக்கு அலர்ஜியாக உள்ளது.

ADVERTISEMENT

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இட ஒதுக்கீட்டைத்தான் காலி செய்வார். வருகின்ற மக்களவைத் தேர்தல் இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடக்கின்ற போர். வீழ்ச்சிதான் மோடியின் சாதனை. மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நிம்மதியாக நடமாட முடிகின்றதா? ஊடக நிறுவனங்களால் நிம்மதியாக செயல்பட முடிகிறதா? தங்களுக்கு கட்டுப்படவில்லை என்றால் ஒட்டுமொத்த நிறுவனங்களை விலைக்கு வாங்கி பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவுவார்கள். உண்மையை எழுதும் பத்திரிகையாளர்களை சிறையில் அடைப்பது, அவர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பது எனப் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவு தான் இன்று ஊடகச் சுதந்திரத்தில் 180 நாடுகளில் 161 வது இடத்தில் இந்தியா இருக்கிறது. நம்முடைய பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி எவ்வளவு பெரிய அவமானம் ஏற்படுத்தி இருக்கிறார். மோடி சொன்ன புதிய இந்தியா அவருடைய ஆட்சியில் எப்படி இருக்கிறது? 32 விழுக்காடு மக்கள் ஊட்டச்சத்து குறைவோடு இருக்கிறார்கள். 44 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தவில்லை. 30 விழுக்காடு மக்கள் அடிப்படை சுகாதார வசதி இல்லாமல் வாழ்கிறார்கள். 41 விழுக்காடு மக்களுக்கு வீடுகள் இல்லை. இப்படித்தான் உள்ளது மோடி சொன்ன புதிய இந்தியா.

மோடி ஆட்சியில் தானியங்களின் விலை 54 விழுக்காடு அதிகமாகிவிட்டது. பால் பொருட்களின் விலை 53 விழுக்காடு அதிகம், எண்ணெய் விலை 48 விழுக்காடு அதிகம், காய்கறி விலை 48 விழுக்காடு அதிகம், மருத்துவ செலவுகள் 71 விழுக்காடு அதிகம். கல்விச் செலவுகள் 60 விழுக்காடு அதிகம். இதெல்லாம் மோடி சொன்ன வளர்ச்சியா? 10 ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தோம் எனச் சொல்லிக் கொள்ளும் பாஜக, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதனால்தான் எந்த மேடையிலும் திட்டங்களையும், சாதனைகளையும் சொல்ல முடியவில்லை. ஆனால் திராவிட மாடலாட்சியைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டில் கஜானாவை தூர்வாரிய அதிமுகவினால் ஏற்பட்ட நிதிச் சுமை; ஒன்றிய பாஜக அரசு தரும் நிதி நெருக்கடி ஆகியவற்றை மீறி ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறோம்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT