ADVERTISEMENT

தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால்தான் அரசுப் பணி; பேரவையில் தமிழக அரசு 

03:44 PM Jan 13, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் என்ற சட்டம் நிறைவேறியுள்ளது.

2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் தமிழில் போதிய அளவு அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வில் தகுதி பெற்று பணியில் இருந்தாலும் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

மேலும் அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது பேசிய அமைச்சர், “அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்ட அரசாணையை செயல்படுத்தும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பிற சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழர்கள் மட்டுமே தேர்வெழுத வேண்டும் என்றும் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

இதற்குப் பதில் கொடுத்த அமைச்சர், “2021 ஆம் ஆண்டு போடப்பட்ட சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால் இன்றைக்கே இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டிய சூழல் உள்ளது. இன்று இந்த சட்ட திருத்தத்தைக் கொண்டு வராவிட்டால் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் என்பதே ரத்தாகிவிடும்” என்று கூறினார். மேலும் பேசிய அவர், “உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு சட்டம் ஒருமனதாக நிறைவேறியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT