ADVERTISEMENT

ஆளுநருக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சீமான்

05:17 PM Jan 09, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியுள்ளது. ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.

ஆளுநர் உரையாற்றும்போது அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ன்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியேறின. தொடர்ந்து தமிழக முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்கு துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டு கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை ஆளுநர் தனது உரையில் படிக்க மறுத்ததை ஒருபோதும் ஏற்க முடியாது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலாகும்.

மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே அவை மரபுகளை மீறி பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும் அமைச்சர்களையும் உறுப்பினர்களையும் அவமதித்துள்ளார். தமிழ்நாட்டு ஆளுநரின் இத்தகைய தரம் தாழ்ந்த போக்கினை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனப் பொறுப்பாளரான ஆளுநர் தமது மலிவான நடவடிக்கையால் தமிழ்நாடு அரசினையும் மக்களாட்சி முறைமையினையும் மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதித்துள்ளார். உடனடியாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT