ADVERTISEMENT

நீட் தேர்வைத் தொடர்ந்து வரும் GMER-23; டிடிவி தினகரன் கண்டனம்

05:38 PM Jun 12, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய பொதுக் கலந்தாய்வு நடத்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை 100% மையப்படுத்த பொது மருத்துவக் கலந்தாய்வை நடத்த தேசிய மருத்துவக் கழகம் (என்.எம்.சி) முன்வந்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார், தன்னாட்சி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒரு கட்ட கலந்தாய்வு மூலம் நடத்த என்.எம்.சி திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. பொதுக் கலந்தாய்வை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொதுக் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான விதிமுறையை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் ஜி.எம்.இ.ஆர். - 23 என அழைக்கப்படுகின்றன. ஜி.எம்.இ.ஆர் - 23 என்பது Graduate Medical Education Regulations என்பதன் சுருக்கமே ஆகும். புதிதாக வெளியிட்டுள்ள அறிவிப்பின் படியே அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த விதிமுறைகளுக்கு முரணாக எந்த மருத்துவ நிறுவனமும் மருத்துவப் படிப்பிற்கு எந்த ஒரு விண்ணப்பதாரரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது, “எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் ஒட்டு மொத்தமாக தேசம் முழுவதற்கும் கலந்தாய்வு நடத்தும் பட்சத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் நிராசையாகிவிடும் ஆபத்துகள் உள்ளன. மத்திய அரசே பொதுக் கலந்தாய்வு நடத்துவதால் தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடைப்பிடிக்கப்படும் 69% இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கல்வியாளர்கள், மாணவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85% எம்.பி.பி.எஸ் இடங்களை நிரப்ப கடந்த காலங்களைப் போல மாநில அரசே கலந்தாய்வு நடத்தவும், மீதமுள்ள 15% இடங்களில் மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தவும் வழிவகை செய்வதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT