ADVERTISEMENT

“குற்றவாளியைத் தியாகியாகச் சித்தரிக்க முயல்கிறது திமுக அரசு” - ஜி.கே வாசன்

11:13 AM Jun 19, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.பின்னர் ஜி. கே. வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் காமராஜர் பிறந்த நாளை ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்திச் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது. மத்திய பாஜக, தமிழகத்தில் அதிமுக, த.மா.கா வளர்ச்சியையும், வெற்றியையும் ஜீரணிக்க முடியாமல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எங்கள் கூட்டணி மீது அவதூறு பேச தொடங்கியுள்ளது.திமுக கூட்டணியில் முரண்பாடு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை தடுக்க சூழ்ச்சியை செய்யத் தொடங்கியுள்ளனர். நேற்று கூட பாஜக, அதிமுக நிர்வாகியை கைது செய்துள்ளனர். இதனை தாமாக வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறையின் மூலம் பழி வாங்கும் நடவடிக்கையில் திமுக செயல்படுகிறது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் இந்திய அளவில் சாதனை படைத்த நிலையில் அவர்களுக்கு உரிய பாராட்டை திமுக அரசு கொடுக்கவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யவேண்டும் என மாணவர்களையும் பெற்றோர்களையும் திமுக குழப்பிக் கொண்டிருந்தனர். சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்ட வேண்டியது அவர்களின் கடமை. பாஜக மத்தியில் 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. மீண்டும் பாஜக பாராளுமன்ற தேர்தலில் வெல்ல வேண்டும். வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கொரோனா காலத்தில் பொருளாதாரத்தை சிறப்பாக கையாண்டது, தடுப்பூசி தயாரித்து பிற நாடுகளுக்கு வழங்கியது, 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை வளர்ச்சி பாதையில் பாஜக அரசு கொண்டு செல்கிறது. இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் பொருளாதாரத்தில் பின்னோக்கி சென்று கொண்டிருந்தாலும் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் உள்ளது. சாராயம், கள்ளச் சாராயம், போதைப் பொருட்களை நிறுத்த முடியாத செயல் இழந்த அரசாக திமுக அரசு உள்ளது. அமைச்சர் ஊழல் செய்ததற்கு ஆதாரங்கள் இருந்த நிலையில் அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரை தியாகியாக சித்தரித்து நிரபராதியாக்க திமுக அரசு முயல்வது வேதனையாக உள்ளது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மீண்டும் அவரை அமைச்சராக்க அரசு செயல்படுகிறது. இது விருப்ப தகாதது‌. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு குற்றவாளியை காப்பாற்ற முயல்கிறது . இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக - பிஜேபி, தமாகா மற்றும் பிற கட்சிகள் மக்கள் விரும்பும் கூட்டணியாக செயல்படுகிறது. திமுக கூட்டணியை எதிர்க்கும் கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது. இந்த முறை பிஜேபி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் எந்த தொகுதியில் நின்றாலும் அவர் வெற்றி பெறுவார்.

நடிகர் விஜய் கல்வித்துறையில் மாணவர்களுக்குப் பயன் தரக்கூடியதைச் செய்வது பாராட்டக்குறியது, வரவேற்கக்கூடியது. அவர் சொல்லும் நல்ல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக ஆளுநர் சாதாரண மக்கள் நிலையைப் பிரதிபலித்து வருகிறார். கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு சுமுகமான முடிவு எடுக்க வேண்டும். அதற்காக இருதரப்பு விவசாயிகளை அழைத்தும் வல்லுநர் கருத்தையும் கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும், இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல. தமிழக அரசு நல்ல தீர்வு காண வேண்டும்.இதைப்போல் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT