ADVERTISEMENT

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும்! மத்திய அமைச்சருக்கு அன்புமணி கடிதம்

08:10 AM Aug 17, 2020 | rajavel

ADVERTISEMENT

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மருத்துவர்களாக பதிவு செய்வதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை 50 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

அந்த கடிதத்தின் விபரம்: “தேசிய தேர்வு வாரியம் நடத்தும், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மருத்துவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், அதை சரி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்தியாவில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் பல்வேறு வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். ரஷ்யா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், உக்ரைன், சீனா, ஜெர்மனி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 52,000-க்கும் கூடுதலான மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இன்றைய நிலையில், பிற நாடுகளில் மருத்துவம் படித்து இந்தியாவில் மருத்துவ சேவையாற்றுவதற்காக 50,000க்கும் கூடுதலான மருத்துவர்கள் தயாராக உள்ளனர். ஆனால், நடைமுறை எதார்த்தங்களுக்கு சற்றும் பொருந்தி வராத தகுதித் தேர்வும், பிற கட்டுப்பாடுகளும் தான் அவர்களின் சேவைகளை பெறுவதில் தடையாக உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும் என்றால், அதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், இத்தேர்வுகள் மிகவும் கடுமையாக இருப்பதால், இந்த தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பவர்களில், சராசரியாக 16 விழுக்காட்டினர் மட்டும்தான் தேர்ச்சி பெறுகின்றனர்; மீதமுள்ள 84 விழுக்காட்டினர் இந்த தேர்வுகளில் தோல்வியடைகின்றனர்.

வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. நிறைவான கட்டமைப்புகளும் உள்ளன. ஆனாலும், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதி தேர்வுகளில் 84 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற முடியாததற்கு காரணம் தேர்வுகளில் கடைபிடிக்கப்படும் கடுமையான விதிமுறைகள்தான். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் 150 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டும்தான் தேர்ச்சி பெற முடியும். ஆனால், அந்த அளவுக்கு மதிப்பெண்களை பெறுவது மிகவும் சிரமம் என்பதால் தான் தேர்ச்சி மதிப்பெண்ணை 30% ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் அனுப்பிய கோரிக்கை மனுவை மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு இந்திய மருத்துவக் குழுவின் செயலாளர் கடந்த ஜூலை 30 ஆம் தேதி அனுப்பியுள்ளார். மணிப்பூர் சுகாதார அமைச்சரும் இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் பாதிப்புகள் இனிவரும் காலங்களிலும் தொடரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அத்தகைய சூழலை சந்திக்க இந்தியாவுக்கு அதிகளவில் மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். மிக அதிக எண்ணிக்கையில் புதிய மருத்துவர்களை உடனடியாக உருவாக்குவது சாத்தியமில்லை என்பதால், வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு, இந்தியாவில் சேவையாற்ற விரும்பும் மருத்துவர்களை அனுமதிப்பது தான் எளிதான, பயனுள்ள செயலாக இருக்கும்.

இதே நோக்கத்துடன் தான் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவக் குழுவின் கோரிக்கையை ஏற்று, தேர்ச்சி மதிப்பெண்களை பொதுப்பிரிவுக்கு 30ஆவது பெர்சென்டைல், பிற பிரிவுக்கு 20ஆவது பெர்சென்டைல் என மத்திய சுகாதார அமைச்சகம் குறைத்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். அதேபோல், இம்மாதம் 31ஆம் தேதி நடைபெறவுள்ள வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை இப்போதுள்ள 50 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாக குறைக்க வேண்டும்; அதன்மூலம், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள், இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்று தங்களைக்ம்கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT