ADVERTISEMENT

ஸ்டாலினை நடுக்கமடைய செய்த பரமக்குடியை சேர்ந்த பெண் தொண்டர்..!

03:20 PM May 04, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வனிதா (32). திமுக தொண்டரான இவர், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானால், தனது நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்துவதாக பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் வேண்டிக்கொண்டுள்ளார். இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதுடன், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

அதனால் வனிதா, தனது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக நேற்று (03.05.2021) காலை முத்தாலம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக கோவில் பூட்டப்பட்டிருந்தது. கோவில் பூட்டியிருந்தாலும் தனது காணிக்கையை செலுத்த வேண்டும் என்பதற்காக வனிதா திடீரென கத்தியால் நாக்கை அறுத்து கோவில் படியில் வைத்துள்ளார். ரத்தம் கொட்டியதால் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து வனிதாவை தூக்கினார். பின்னர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பரமக்குடி நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனிதாவை சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், துண்டாகிக் கிடந்த நாக்கையும் போலீசார் எடுத்துச் சென்றனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்து வேதனை அடைந்த மு.க.ஸ்டாலின், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, “இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற தி.மு.க. தொண்டர், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாகக் கோயிலில் வேண்டிக்கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.

தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனிதநேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம். நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதைப் பற்றி கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை, எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக்கொள்ளாதீர்கள்.

அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT