ADVERTISEMENT

பூத் கமிட்டியினர்களுக்கு ஐடியா கொடுத்த இ.பி.எஸ்.

11:03 AM Jan 28, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிப். 27 ஆம் தேதி காலை ஈரோட்டுக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமைக்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனையும் அறிவுரையும் வழங்கினார்.

மேலும் இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “ஈரோடு கிழக்கில் தான் நமது கட்சியின் ஓட்டு ஒட்டுமொத்த நிர்வாகிகளின் மானம் இருக்கும். இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை திமுகவினரே சொல்கின்றனர். மூன்றில் ஒரு பகுதி ஆட்சி முடிந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக ஒரு துரும்பளவிற்கு கூட பணி செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். நாம் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம். திமுக கூனி, குறுகி ஓட்டு கேட்க வேண்டும்.

ஈரோடு தொகுதியில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் அதிகம். வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியுள்ளனர். மாதம் 1000 இல்லத்தரசிகளுக்கு வழங்குவதாக கூறினர். இப்போது, தகுதியானவர்களுக்கு கொடுப்பதாகக் கூறி ஏழை மக்களை ஏமாற்றுகின்றனர். எப்போது கணக்கெடுத்து, எப்போது கொடுப்பார்கள். எந்த முக்கியமான திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. முதியோர் உதவித்தொகையை உயர்த்துவதாக கூறியவர்கள், நாம் கொடுத்து வந்ததை நிறுத்திவிட்டனர். கல்விக்கடன் ரத்து செய்யப்படவில்லை. 52 லட்சம் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் லேப்டாப் வழங்கப்பட்டது. அந்த திட்டத்தை நிறுத்தி விட்டனர். திருமண நிதி உதவி, இருசக்கர வாகன திட்டத்தையும் நிறுத்தி விட்டனர்.


ஈரோடு மாநகரில் ரூ. 100 கோடிக்கு மேல் அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல், ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது, திண்டல் உயர்மட்ட பாலத்திற்கு ரூ. 300 கோடி ஒதுக்கினோம், அரசு மருத்துவமனை பாலம், ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டம் கொண்டுவந்தோம். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதனைக்கூட கிடப்பில் போட்டுவிட்டனர். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினோம். இதன் மூலம் 564 பேர் மருத்துவம் படிக்கின்றனர். அரசே கல்விக் கட்டணத்தை ஏற்றது.


திமுக ஆட்சி வந்தபின் ஒரு துரும்பை கூட செய்யவில்லை. விசைத்தறி தொழிலாளர்கள் வேலையிழந்து வெளியூர் சென்று விட்டனர். விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி பணியை அவர்களுக்கு முறையாக கொடுக்கவில்லை. விசைத்தறி தொழில் நலிந்து விட்டது. இதைப்பற்றி கவலைப்படாமல், கமிஷன், கலெக்சன் ஆட்சி தான் நடக்கிறது.


பொங்கலுக்கு ரூ 2500 கொடுத்தோம். இவர்கள் 21 பொங்கல் பொருள் கொடுப்பதாக கூறினர். யாராலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தரமற்ற பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கிக் கொடுத்தார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பொங்கலுக்கு ரூ. 5000 கொடுக்க வேண்டும் என்று சொன்ன ஸ்டாலின், ரூ. 1000 தான் கொடுத்தார். விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகுதான் கரும்பு கொடுத்தார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தப்பட்டதுதான் திராவிட மாடல் ஆட்சி என மக்களிடம் புரிய வைக்க வேண்டும்.


நீங்களே தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது போல் எண்ணி, தேர்தல் பணி ஆற்ற வேண்டும். இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஈரோடு இடைத்தேர்தல் தான் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். மக்கள் பாராட்டும் அளவுக்கு பணியாற்ற வேண்டும். அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமையை காக்க வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT