ADVERTISEMENT

இ.பி.எஸ். மேல்முறையீட்டை முடித்து வைத்த டெல்லி உயர்நீதிமன்றம்

11:11 AM Apr 12, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை எழுந்த நிலையில், பல்வேறு அரசியல் திருப்பங்களுடன் இ.பி.எஸ். அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற்று, அதில் இ.பி.எஸ். மட்டுமே மனுத் தாக்கல் செய்ய, எதிர் தரப்பான ஓ.பி.எஸ். அணி அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, ஓ.பி.எஸ். தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்தார். தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே பதவியேற்று ஓ.பி.எஸ்.சின் அடுத்த நகர்வுக்கு நெருக்கடி ஏற்படுத்தி இ.பி.எஸ். அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேசமயம், ஓ.பி.எஸ். தரப்பு தனி நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விசாரணையில் இருந்து வருகிறது.

பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இ.பி.எஸ். அன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர்” என்று தெரிவித்தார். நீதிமன்றமும், தொண்டர்களும் தந்த அங்கீகாரத்தை அங்கீகரிக்கக் கோரி இ.பி.எஸ். தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்ய, நீதிமன்றத்தின் அங்கீகாரத்துக்கு அணை போட, மேல் மூறையீடு செய்த ஓ.பி.எஸ்., தொண்டர்களின் அங்கீகாரத்தையும் தடை செய்யச் சொல்லி ஆணையிட தேர்தல் ஆணையத்திற்கு மனு செய்தார்.

அந்த மனுவில், ‘நீதிமன்றங்களில் அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இ.பி.எஸ்.சின் முறையீட்டை ஏற்று பொதுச் செயலாளர் பதவியை அங்கீகரிக்கக்கூடாது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ். தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கடந்த 10 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் தங்களுக்கு இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதனை ஏற்ற டெல்லி உயர் நீதிமன்றம், வழக்கை இன்றைக்கு (12 ஆம் தேதி) ஒத்திவைத்தது.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் நீதிபதி புரஷேந்திரா குமார் கௌரவ் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக இ.பி.எஸ். அணி சார்பில், கர்நாடகா தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் அதன் காரணமாக விரைந்து விசாரித்து தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் ஓ.பி.எஸ். தரப்பில், பொதுச்செயலாளர் நியமனம், சட்ட விதி திருத்தம் ஆகிய மூல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இ.பி.எஸ். மனுவை ஏற்கக் கூடாது என வாதிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் சார்பில், பத்து நாட்களுக்குள் அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான விவகாரத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற டெல்லி உயர் நீதிமன்றம் இ.பி.எஸ். தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT