ADVERTISEMENT

“பணம் கொடுக்கிறோம் என்று அழைத்துச் சென்று ஈ.பி.எஸ். பணம் கொடுப்பதில்லை” - வைத்திலிங்கம் ஓபன் டாக்

03:19 PM Dec 21, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு அணிகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இருதரப்பினரும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று உரிமை கொண்டாடி வருகிறார்கள். இதில் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கட்சிப் பொதுக் கூட்டங்கள் கூட்டுவது, அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்வது எனத் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு அமைதியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று (டிச.21) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கடந்த சனிக்கிழமை ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடாக நேற்று ஓபிஎஸ் அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பின் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமைத் தாங்கினார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், “பதவிக்கு ஆசைப்பட்டு யார் தவறாக நடக்கிறார்களோ அவர்கள் வனவாசம் போய்விடுவார்கள். அப்படிக் கூடிய சீக்கிரம் வனவாசம் செல்ல இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. யாரெல்லாம் இயக்கத்திற்கு உழைத்தார்களோ, அவர்களுக்குத் துரோகம் செய்தவர் பழனிசாமி. அதிமுகவில் யாரும் தவழ்ந்து போக மாட்டார்கள். தவழ்ந்து சென்று சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் பழனிசாமி. தினகரனுக்கும் துரோகம் செய்தவர்தான் அவர். அதே போல் ஓபிஎஸ்-யை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தத் துடிக்கும் பழனிசாமி அதிகாரப் போதைக்குச் சொந்தமானவர்.

நம்மிடம் தான் சின்னம் வரும். நாம் தான் அரசை மீண்டும் நடத்துவோம். பழனிசாமியுடன் இருப்பவர்கள் ஜெயலலிதா இல்லாத காலத்தில் எவ்வளவு தவறு செய்ய முடியுமோ அவ்வளவு தவறுகளைச் செய்தவர்கள். மிகப்பெரிய பாவம் நன்றியை மறப்பது. அந்த நன்றியை மறப்பதே தொழிலாகக் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. ஊராட்சி செயலாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். 10 நாட்களுக்குள் 12,500 ஊராட்சி செயலாளர்களை நாம் தேர்வு செய்ய வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி உடன் இருப்பவர்கள் சோர்ந்து விட்டனர். அவர்களை எழுப்புவதற்குத்தான் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்துகிறார். 50 முதல் 100 பேர் கூட இல்லை. சில இடங்களில் பணம் கொடுக்கிறோம் என அழைத்து வந்தும் பணம் கொடுப்பதில்லை. இவ்வளவு கேவலமாகக் கட்சியை அழிக்க நினைக்கிற பழனிசாமிக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்” எனக் கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT