ADVERTISEMENT

தி.மு.க.வினர் ஆங்காங்கே பணம் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் -ஜெயக்குமார்

03:42 PM Apr 03, 2019 | rajavel

ADVERTISEMENT

சென்னை கிண்டி தனியார் ஹோட்டலில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களிடம் தேர்தல் அதிகாரிகள், தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

ADVERTISEMENT


இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். ஆனால் தி.மு.க. 2ஜியில் சம்பாதித்த ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கிறார்கள்.

வேலூரில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பணமும் புது நோட்டுகளாக உள்ளதால் எந்த வங்கியில் யார் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம். அந்த நபருக்கும், துரைமுருகனுக்கும் என்ன நெருக்கம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தக்கூடாது. வாக்குச் சாவடிகளுக்கும், வாக்காளர்களுக்கும் கொடுப்பதற்காக அந்த பணத்தை வைத்திருந்தது தெரியவந்தால் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தி.மு.க. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனில் வலியுறுத்தி உள்ளேன்.



திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடத்தினாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. இப்போது நடத்தினாலும் சரி, பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே நடத்தினாலும் சரி, எப்போது வேண்டுமானாலும் அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கும்.

கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் பெயரை சொல்லி அவருக்கு களங்கம் கற்பிக்க கூடாது என்று கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக மேடையில் ஏறி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு களங்கம் கற்பித்து வருகிறார். இது தேர்தல் விதிகளை மீறிய செயலாகும். இதுகுறித்தும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம்.

சென்னையில் குடிசைகளில் தங்கி இருந்தவர்களை அகற்றி குடிசை மாற்றுவாரிய வீடுகளுக்கு இடமாற்றம் செய்திருக்கிறார்கள். அவர்கள் ஓட்டு பழைய தொகுதிகளிலேயே உள்ளது. எனவே அவர்களை சிறப்பு வாகனங்களில் அழைத்து வந்து வாக்களிக்க செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக தி.மு.க.வினர் ஆங்காங்கே பணம் பதுக்கி வைத்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையும் தேர்தல் கமி‌ஷனில் எடுத்து சொல்லி இருக்கிறோம். பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT