ADVERTISEMENT

நக்கீரன்  செய்தி எதிரொலி - மூடப்பட்ட அரசுப்பள்ளி சத்தமில்லாமல் திறக்கப்பட்டது

09:36 PM Jun 08, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அல்லம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சத்தமில்லாமல் தமிழக அரசு பூட்டிவிட்டது என்பதை சத்தமில்லாமல் பூட்டப்பட்ட அரசுப்பள்ளிகள் என்ற தலைப்பில் 7 ந் தேதி இரவு நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டோம். அப்போதே அந்த செய்தியை பார்த்த கல்வித்துறை அதிகாரிகள் நள்ளிரவிலேயே ஆலோசனை நடத்தி உள்ளனர்.

ADVERTISEMENT


இந்த நிலையில் வெள்ளிக் கிழமை காலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வன், வட்டார கல்வி அலுவர் முத்துக்குமார் ஆகியோர் அல்லம்பட்டிக்கு சென்று கடந்த ஆண்டு சத்தமில்லாமல் பூட்டிய பள்ளியை பார்த்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அருகில் குளத்தூர் கிராமத்தில் பணியில் இருந்த ஆசிரியை சுப்புலெட்சுமியை தற்காலிக அவசர பணி நிரவலில் அல்லம்பட்டி தொடக்கப்பள்ளிக்கு வரவழைத்து பள்ளியை திறக்கச் செய்தனர். திறக்க செய்த அதிகாரிகள் கிராமத்திற்குள் சென்று மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தினார்கள்.


பள்ளியை திறந்த ஆசிரியை பள்ளி வகுப்பறைக்குள் உடைந்து கிடந்த பீரோக்களை சரி செய்து வகுப்பறை முழுவதும் பரவிக் கிடந்த புத்தகம் மற்றும் ஆவணங்களை ஒழுங்கு செய்து பள்ளியில் மாலை வரை இருந்தார்.


இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறும் போது.. அல்லம்பட்டி பள்ளி மூடப்படவில்லை. ஆனால் மாணவர்கள் இல்லை. பள்ளியில் இருந்த ஆசிரியையும் இடமாறுதலில் சென்றுவிட்டார். அதனால் மூடப்பட்டது. தற்போது பள்ளியை மீண்டும் திறந்தாகிவிட்டது. மாணவர்கள் இல்லை என்றாலும் விரைவில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை கிராம மக்களிடம் எடுத்து சென்றிருக்கிறோம். மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் நலத்திட்டங்கள் பற்றியும், உள்ளுரில் பள்ளி வேண்டும் என்பதை பற்றியும் எடுத்து சொல்லி வருகிறோம். அதனால் கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் மாணவர் சேர்க்கையோடு பள்ளி தொடர்ந்து செயல்படும் என்றனர்.


மூடப்பட்ட ஒரு அரசுப்பள்ளியை நக்கீரன் செய்தியால் மீண்டும் திறக்கப்பட்ட மனநிறைவு நமக்கு ஏற்பட்டது. இதே போல திருவரங்குளம் ஒன்றியம் வாழைக்கொல்லை அரசுப்பள்ளியிலும் மாணவர்களை சேர்த்து தொடர்நது செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதெ நம் விருப்பம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT