ADVERTISEMENT

திமுகவின் மாபெரும் திட்டம்; கலைஞரின் நூற்றாண்டு துவங்குவதற்குள் செயல்படுத்த முயற்சி

03:43 PM Mar 22, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

“ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க 'உடன்பிறப்புகளாய் இணைவோம்' என்ற மாபெரும் முன்னெடுப்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது. இந்த பெருமுயற்சியை ஏப்ரல் 3 ஆம் தேதியன்று தொடங்கி ஜூன் 3, 2023 கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் ஜூன் 3ல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கொண்டாடுவோம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், முத்தமிழ் அறிஞர், 95 ஆண்டுக்கால வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்கு ஒப்படைத்த ஓய்வறியா போராளி; போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற சாதனை நாயகர்; தாய்த்தமிழ் நாட்டினை 19 ஆண்டுகள் ஆட்சி செய்த தலைசிறந்த நிர்வாகி தலைவர் கலைஞருக்கு வரும் சூன் - 3 ஆம் நாள் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. கலைஞர் 1924 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் நாள் திருக்குவளையில் பிறந்தார். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள் இயற்கை நம்மிடம் இருந்து அவரைப் பிரித்தது. அன்று முதல் கலைஞரின் கனவுகளை நிறைவேற்ற தினமும் நாம் பணியாற்றி வருகிறோம்.

'பணியைத் தொடங்கிவிட்டாயா? வெற்றிக்கு திட்டமிட்டுவிட்டாயா?' என்று 'முரசொலி'யில் கலைஞர் அவர்களே எழுதிக் காட்டியதைப் போன்ற உத்வேகத்துடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உழைத்து வருகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி முகத்தைத் தொட்டோம். ஆறாவது முறையாக தாய்த்தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கினார்கள். தலைவர் கலைஞர் அவர்களின் வார்ப்பாக மட்டுமல்ல, தலைவர் கலைஞராகவே செயல்பட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின்.

'சொன்னதைச் செய் - செய்வதைச் சொல்' என்று இன்றும் கலைஞரின் குரல் ஒலித்துக் கொண்டே இருப்பதால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றிக் காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்திய நாட்டில் பரவியிருக்கும் பல்வேறு மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உச்சிக்கு கொண்டு சென்று மகுடத்தில் நிலைநிறுத்தி இருக்கிறார் முதலமைச்சர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கைத் திட்டங்கள் இன்று இந்தியாவையே ஈர்த்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கவனத்தையும் தமிழ்நாட்டை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கழகமும் - கழக ஆட்சியும் ஒரே நேரத்தில் பேரும் புகழும் அடைந்திருக்கும் இந்த ஆண்டில் நம்மை எல்லாம் ஆளாக்கிய கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வருவது மிக மிகப் பொருத்தமானது. இது கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு ஆகும்.

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் அரை நூற்றாண்டு காலம் கட்டிக் காத்த நம் கழகத்தை மேலும் வலிமைப்படுத்த, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க 'உடன்பிறப்புகளாய் இணைவோம்' என்ற மாபெரும் முன்னெடுப்பு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே, ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3 ஆம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3, 2023 தலைவர் கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது. துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடு தோறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைத்திடுவோம்.

கலைஞரை தாய் தமிழ்நாட்டிற்கு தந்த திருவாரூரில் சூன் 3 அன்று, தலைமை கழகத்தால் நூற்றாண்டு தொடக்கவிழா மாநாடு நடைபெற இருக்கிறது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள “கலைஞர் கோட்டம்” வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை; கட்டிடங்கள் என்று சொல்வதை விட அன்னை தமிழ்நாட்டிற்கும் இந்திய திருநாட்டிற்கும் தலைவர் கலைஞர் ஆற்றிய பங்களிப்பின் பசுமையான நினைவுச் சின்னங்களாக “கலைஞர் கோட்டம், அருங்காட்சியகத்தை” அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள். தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். வரும் சூன் 3 ஆம் நாள் தொடங்கி அடுத்த ஆண்டு சூன் - 3 வரை ஓராண்டு காலம் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக - மக்கள் விழாவாக - கொள்கை விழாவாக - வெற்றி விழாவாக இந்தியத் திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழ் மொழிக் காப்பு - தமிழின உரிமைகள் - தமிழ்நாட்டின் உயர்வு - திராவிடச் சுயமரியாதை - மாநில சுயாட்சி - சகோதரத்துவம் - மதச்சார்பின்மை - சாதி ஒழிப்பு - ஒடுக்கப்பட்டோர் நலன் – சமூக நீதி - பெண்ணுரிமை - இலக்கிய வளர்ச்சி - கலைத்துறை மேம்பாடு எனப் பலமுனைப் பங்களிப்புகளை தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றி இருக்கிறார்கள். எந்த நோக்கத்துக்காக தனது வாழ்க்கையையே தலைவர் கலைஞர் அவர்கள் ஒப்படைத்துக் கொண்டார்களோ அந்த நோக்கத்துக்காக தலைவர் கலைஞர் அவர்களின் வழித்தடத்தில் அயராது பணியாற்ற இக்கூட்டம் உறுதி ஏற்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT